Show all

இந்தியாவில் பல கொலைவழக்குகளில் தேடப்பட்டு வந்த சோட்டாராஜன் இந்தோனேசியாவில் கைது.

இந்தியாவில் பல கொலைவழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டார். இதற்கு அந்நாட்டு அரசுக்கும் இன்டர்போல் போலீசுக்கும்  நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த ராஜேந்திர சதாஷிவ் நகால்ஜி என்கிற சோட்டா ராஜன் (55), 1995 ஆம் ஆண்டு, தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். 20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டுவந்த சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலித்தீவில், இன்டர்போல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின் பேரில், இந்தோனேசியா அரசின் ஒத்துழைப்பால், இன்டர்போல் போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்தத் தகவல் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, நடந்த சம்பவங்களை விவரித்தார்.

இதையடுத்து ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது உண்மைதான். இதற்காக இந்தோனேசியா அரசு மற்றும் இன்டர்போல் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சோட்டா ராஜனை அடையாளம் காணுதல் மற்றும் அவரிம் மேற்கொள்ள வேண்டிய விசாரணை குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் வேண்டுகோளின் பேரில்தான் இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்தது என்றார்.

நடுவண் உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறுகையில், இந்த விவகாரத்தில் இந்தியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்துதான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்டர்போல் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சிபிஐயிடம் தரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்திலும் சிபிஐதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.