Show all

கணேஷ் என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளனர் இசுலாமியத் தம்பதிகள்.

மும்பையைச் சேர்ந்த நூர்ஜகான் என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு, அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவரது கணவர் உடனடியக ஒரு வாடகைக் காரைப் பிடித்து வந்திருக்கிறார். அதில் கணவனும் மனைவியும் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவர்கள் வசிக்கும் பகுதி நிறைய குறுகலான தெருக்கள் நிறைந்த பகுதி என்பதால், அந்த கார் ஓட்டுனரால் வேகமாக ஓட்டமுடியவில்லை. இதற்கிடையில் நூர்ஜகானும் பிரசவ வலியில் துடித்திருக்கிறார். பயந்து போன அந்த கார் ஓட்டுனர் அவர்களை நடு ரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

என்ன செய்வதென்று புரியாமல் தவித்த அந்த நூர்ஜகானின் கணவர் இலியாஸ், அருகிலிருந்து விநாயகர் கோவிலில் மனைவியை அமர வைத்துவிட்டு, வேறோரு வாடகைக் காரைப் பிடிக்க ஒடியிருக்கிறார்.

கோவிலின் வாசலில், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நூர்ஜகானைப் பார்த்த அந்தப்பகுதி பெண்கள், உடனடியாக ஓடிவந்து அவரை கோவிலின் உள்ளே அழைத்துச்சென்று, அருகிலிருந்த வீடுகளில் இருந்த சேலை மற்றும் படுக்கை விரிப்புகளை பயன்படுத்தி அங்கு ஒரு பிரசவ அறையையே உருவாக்கி விட்டார்கள்.

அங்கிருந்த பெண்களும், வயதான பாட்டிகளும் பிரசவம் பார்க்க, சில நிமிடங்களில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் அவரது கணவன் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்.  தாயையும், குழந்தையையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக கூறினர்.

இது பற்றி பேசிய நூர்ஜகான் “எனக்கு நடுரோட்டிலேயே பிரசவம் நடந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன். அருகில் இருந்த வினாயகர் கோவிலைக் கண்டவுடன், அந்தக் கடவுளே என்னுடன் இருப்பாதாக உணர்ந்தேன். பிறகுதான் எனக்கு தைரியம் வந்தது” என்றார்.

அவரது கணவன் இலியாஸ் “என்ன செய்வதென்றே தெரியாமல், நாங்கள் தவித்த போது, வினாயகர் கோவிலின் அருகில் இருந்த பெண்கள், நாங்கள் அழைக்காமலேயே ஓடி வந்து என் மனைவிக்கு பிரசவம் பார்த்தனர்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், விநாயகர் கோவிலில் தங்கள் மகன் பிறந்துள்ளதால், அக்குழந்தைக்கு கணேஷ் என்று பெயர் சூட்ட முடிவெடுத்திருப்பதாக இந்தத் தம்பதிகள் முடிவெடுத்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.