Show all

தாய்மொழி வழிக் கல்வி கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படும் என்இஇடி யால்

தமிழ் உள்பட 7 மொழிகளிலும் மருத்துவ நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு கோரிக்கை

தமிழ், தெலுங்கு உள்பட ஏழு மொழிகளில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (என்இஇடி) நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தவே கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர சீரான முறையில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெளிவுபடுத்தி உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தனியார் கல்லூரிகள், பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்2  மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு (கவுன்சிலிங்) மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை முடிவுக்கு வந்துள்ளது.

இதனால், மாநில மொழி வழிக் கல்வியில் இதுவரை மருத்துவப் பட்டப் படிப்பில் சேர கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கிடைத்து வந்த வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம் உள்பட சில மாநிலங்களில் மொழி வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர மாநில அரசே நடத்தி வந்த தேர்வு முறையும் இனி நடத்தப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த மாநிலங்களில் மாநில மொழி மூலம் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் என்இஇடி எந்த மொழியில் தேர்வு எழுத வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் செவ்வாய்க்கிழமை உத்தரவு தெளிவுபடுத்தவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி அனில் ஆர். தவே தலைமையிலான அமர்வு முன் நடுவண் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி,

என்இஇடி, ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

இதனால், பல மாநிலங்களில் மொழி வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் என்இஇடி எழுத முடியாமல் பாதிக்கப்படுவர்.

தமிழ், தெலுங்கு, அசாமீஸ், பெங்காளி, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய ஏழு மொழிகளிலும் என்இஇடி தேர்வு நடத்த அனுமதித்தால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சம வாய்ப்பும் உரிமையும் கிடைக்கும் என்று கூறினார்.

 இதையடுத்து, நீதிபதி அனில் ஆர். தவே, இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் அமர்வு பரிசீலிக்கும் என்றார். இருப்பினும், இந்தப் பரிசீலனை எப்போது நடைபெறும் என்பதை நீதிபதி அனில் ஆர்.தவே தெளிவுபடுத்தவில்லை.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (மே 9) உத்தரவு பிறப்பித்தது.

 இந்த உத்தரவிலும் மாறுதல் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் அது வழக்கமான நீதிமன்ற நடைமுறையில் விசாரிக்கப்படுமா அல்லது நீதிபதிகள் அறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது. நீதிபதி அனில் ஆர். தவே தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஏ.கே. கோயல் ஆகியோர் இந்த வாரத்தில் ஒன்றாகக் கூடி வழக்கை விசாரிப்பதற்கான அலுவல் ஏதும் இல்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நீதிபதிகள் அறையில் நடுவண் அரசின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் அதன் முடிவில் நீதிபதிகள் அறிவிக்கும் முடிவு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.