Show all

விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்

     நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓர் ஆண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்க மற்றும் ரஷ்ய வீரர்கள் பத்திரமாக இன்று காலை பூமிக்குத் திரும்பினர்.

நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி, ரஷ்யாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்னிகோ ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஆய்விற்காக சென்றனர்.

 

தற்போது விண்வெளியில் மனிதர்கள் அதிகபட்சம் எத்தனை நாட்கள் தங்கியிருக்க முடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு நடத்தி வருவதால், அவர்கள் இருவரையும் முடிந்தவரை நீண்ட நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ள அந்நாடு கேட்டுக் கொண்டது. இதையேற்று அவர்கள் இருவரும் அங்கேயே 340 நாட்கள் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஏராளமான தகவல்களைத் தினமும் பூமிக்கு அனுப்பி வந்தனர். அவர்கள், 144 மில்லியன் மைல்கள் பயணித்து, பூமியை 5440 முறை சுற்றி வந்துள்ளனர். இது குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டு அவர்கள் கசகஸ்தான் பாலைவனப் பகுதியில்  இன்று காலை தரையிறங்கினர். இதன் மூலம் அவர்கள் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த இரண்டாவது வீரர்கள் என்ற சிறப்பினை பெற்றனர்.

 

முன்னதாக, 1990ம் ஆண்டு ரஷ்ய டாக்டர் 438 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருப்பது குறித்து தங்கள் சோதனை முயற்சி தொடர்ந்தாலும்,  அங்கு கதிரியக்க பாதிப்பு அதிகம்  என்பதால், அதனைத் தவிர்ப்பது குறித்தும் தாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், வரும் 2030ம் ஆண்டு செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும் அந்நாடு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.