Show all

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக நடுவண் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிஉள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது பற்றி உரிய அரசு முடிவெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தது.

 

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

 

ஆயுள் தண்டனை காலம் முடிந்த நிலையில் அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக பஜக நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த டிசம்பரில் வழக்கு விசாரணை முடிவில் இந்த வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. நடுவண் அரசுக்குத்தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இவ்விவகாரத்தில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு மற்றொரு முயற்சியை மேற்கொண்டு உள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக நடுவண் உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதிஉள்ளார். சிறையில் உள்ள 7 பேரது மனுவையும் ஏற்று தமிழக அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது. 7 பேரும் ஏற்கனவே 24 வருடங்களை சிறையில் கழித்து உள்ளனர். 7 பேரையும் விடுவிக்கும் முடிவு தொடர்பாக நடுவண் அரசின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. 435-வது பிரிவின் கீழ் நடுவண் அரசு கருத்து தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.