Show all

உ.பி.யை இஸ்லாமிய மாநிலமாக மாற்றும் அகிலேஷ் அரசு சிவசேனா குற்றச் சாட்டு

இஸ்லாமிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

 

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ‘லக்னோ மஹோற்சவம்’ நிறைவு விழாவையொட்டி பாகிஸ்தானிய கஸல் இசைக் கலைஞர் குலாம் அலியின் இன்னிசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை கடந்த ஆண்டு மும்பையில் சிவசேனா ரத்து செய்யச் செய்தது. இதுபோல் லக்னோ நிகழ்ச்சிக்கும் அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்பை மீறி குலாம் அலியின் இசை நிகழ்ச்சி லக்னோவில் அமைதியாக நடந்து முடிந்தது.

 

இந்நிலையில் சிவசேனாவின் ‘சாம்னா’ இதழில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

 

இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காவே குலாம் அலி, இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று ‘இஸ்லாமிய’ யாதவ் அரசு கூறுகிறது. ஆனால் ஒற்றுமையை வளர்க்க ஏன் பாகிஸ்தான் இசைக் கலைஞர்களை அழைக்க வேண்டும்? நம் நாட்டிலேயே புகழ்பெற்ற முஸ்லிம் இசைக் கலைஞர்கள் இருக்கிறார்களே?

 

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு தாஜா செய்யும் அரசியலுக்காக இதன் மூலம் தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது.

 

சிறந்த கலைஞர்களின் சுரங்கமாக உத்தரப்பிரதேசம் திகழ்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து நிலக்கரியை தான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் விரும்புகிறார். சிறுபான்மையினரை திருப்திபடுத்த நாளை ஹபீஸ் சயீதை முலாயம் வரவழைக்கலாம்.

 

பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் பதான்கோட் தாக்குதலை மக்கள் மறக்கவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை அனுமதிப்பவர்கள் நாட்டின் துரோகிகள். பயங்கரவாத தாக்குதலில் உயிர்தியாகம் செய்த ஜவான்களின் குடும்பத்தினர் கடும் துயரத்தில் உள்ளனர். இந்தத் துயரத்துக்கு மத்தியில் குலாம் அலியின் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தவர்கள் மீது தேசவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். உ.பி.யில் 71 பாராளுமன்றஉறுப்பினர;களைப் பெற்றுள்ள பாஜக இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறது.

 

இந்திய அரசுக்கு ஐ.எஸ். அமைப்பு தொல்லை தரும் வேளையில் முலாயமும் அகிலேஷும் உ.பி.யை இஸ்லாமிய மாநிலமாக மாற்றியதுடன் குலாம் நபியை வரவேற்பது எல்லை மீறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.