Show all

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விசாரணைகளின் அறிக்கையை பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கும், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் ஐ.நா. விசாரணை அறிக்கை அமைந்திருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள முக்கியமான பரிந்துரைகள் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும், நிலைப்புத் தன்மையையும் ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, நேர்மையான, நம்பகத்தன்மையான பொறுப்புக்கூறல் செயற்பாட்டை சர்வதேச தரத்தில் முன்னெடுப்பதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என ஐ.நா செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சகல சமூகத்தினரும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் இலங்கையர்கள் அனைவரும் கோரி நிற்பது இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

இலங்கை அரசாங்கத்தின் பதில் மற்றும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் காண்பித்திருக்கும் அர்ப்பணிப்பை ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளதுடன், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் சாதகமான நடவடிக்கைகளை வரவேற்றிருக்கும் அவர், இலங்கையின் இந்தப் பணிகள் தொடரும் பட்சத்தில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் சுபிட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.