Show all

என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன். ரோஜா:

நகரியில் கடந்த ஆண்டு கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த விழாவின்போது நடிகை ரோஜா தாக்கப்பட்டார். இந்த ஆண்டும் திருவிழாவிற்கு சென்ற அவர், என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் என்று கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நடிகை ரோஜா அந்தத் தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் தாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டும் கோவில் திருவிழாவுக்கு ரோஜா வரக்கூடாது என்று அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

ஆனால் எதிர்ப்பை மீறி கோவில் திருவிழாவில் பங்கேற்க ரோஜா தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் நேற்று நகரிக்கு சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரிடம் பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவுவதால் கோவில் திருவிழாவுக்கு செல்லவேண்டாம் என்று தடுத்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது நடிகை ரோஜா செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், நகரி தொகுதியில் உள்ள ஓர்குண்டளம்மா தேவதை மற்றும் கங்கை அம்மன் திருவிழாக்களில் வருடந்தோறும் பங்கேற்று வருகிறேன். ஆனால் இந்த பகுதியில் இருக்கும் சிலர் என்னை இந்த விழாவுக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். மேலும் தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். இங்கு இருக்கும் காவல்துறையினர் எனக்கு பாதுகாப்பு அளிக்காமல் என்னை விழாவுக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.

சாமியை வழிபடுவது என் உரிமை. திருவிழாவில் பதட்டமாக இருந்தால் எனக்கு பாதுகாப்பு தரவேண்டியது போலீசார் கடமை. ஆனால் வரவேண்டாம் என்று தடுப்பது நியாயம் இல்லை. எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? நான் உயிருக்கு பயப்படமாட்டேன். என்னை தாக்கினால்  பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் என்று ரோஜா கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.