Show all

லாரியை விட்டு ஏற்றி 80 உயிர்களைக் கென்ற கொடூரம். பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை

பிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் பயங்கரவாதி ஒருவன் கண்டய்னர் லாரியை விட்டு ஏற்றியதில், 80 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

பிரான்ஸில் ஆண்டுதோறும் ஜூலை 14-ஆம் தேதி பாஸ்டில் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். தேசிய விடுமுறையான இந்நாளில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். வாண வேடிக்கை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கண்டய்னர் லாரி ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது.

 

இதில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

கண்டய்னர் லாரியை ஏற்றிவிட்டு தப்ப முயன்ற நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதச்செய்த கண்டய்னர் லாரியில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவத்தில் ஒரு நபர் மட்டும்தான் ஈடுபட்டவரா, அல்லது மேலும் வேறு யாராவது இருக்கின்றனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நைஸ் நகரம் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

 

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் இருந்ததாகவும் நைஸ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு கொடூரமான தாக்குதல் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இத்தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள பாரீஸில் உள்ள தூதரகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

 

இத்தாக்குதலின் எதிரொலியாக, பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.