Show all

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி 6நாட்கள் நடக்கிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு பசிபிக் கடலில் நடைபெற்றது. இந்த ஆண்டு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியக் கடற்படை போர்கப்பல்களில் ஒன்றான ஐ.எஸ்.எஸ்.ஷிவாலிக் கப்பலில் வைத்து நேற்று நடைபெற்றது.

இதில், இந்தியக் கடற்படையின் உயரதிகாரிகள் பி.கே.வர்மா, எஸ்.வி.போக்ரே, அமெரிக்க கடற்படையின் உயரதிகாரிகள் சி.வில்லியம்ஸ், ஜே.பி.அக்யான், ஜப்பான் கடற்படையின் உயரதிகாரிகள் மோராகோவா, அஷியனோ ஆகியோர் கலந்துகொண்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது இந்திய கடற்படை உயரதிகாரி பி.கே.வர்மா நிருபர்களிடம் கூறுகையில்,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி இந்த ஆண்டு 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

இதில், முதல் 2 நாட்கள் துறைமுகத்திலும், 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 4 நாட்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாட்டின் போர்க்கப்பல்களின் செயல்பாடுகள், நீர்மூழ்கி கப்பல் தடுப்பு போர் பயிற்சி, வான்வெளி தாக்குதலை எதிர்கொள்வது, படகு ரோந்து மூலம் கடல் எல்லையில் அத்துமீறி நுழைபவர்களைக் கையும், களவுமாக பிடிப்பது, கடலில் மூழ்குபவர்களைத் தேடுவது, மீட்பது உள்பட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.