Show all

செர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் சிலைத்திறப்பு! பிரித்தானிய இந்திய ஆட்சியர் எல்லீஸ் வடிவமைத்த இளமைஅழகில்

செர்மனியில், லிண்டன் அருங்காட்சியகத்தில் இன்று திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கியிருக்கிறார், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரி கோ.பாலச்சந்திரன்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்துக்கு, தமிழ் ஹெரிடேஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் திறப்புவிழா இன்று விமரிசையாக நடைபெறவுள்ளது.

புகழ்பெற்ற லிண்டன் அருங்காட்சியகத்துக்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தால் அவரைப் பற்றி உலக மக்கள் தெரிந்துகொள்வதற்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்பதால் தமிழ் ஹெரிடேஜ் பவுண்டேஷன், திருவள்ளுவர் சிலையை அந்த அருங்காட்சியகத்தில் நிறுவ உள்ளது.

லிண்டன் அருங்காட்சியகத்தில் இன்று திறக்கப்பட உள்ள இரண்டு சிலைகளில் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறார், ஓய்வு பெற்ற இந்தியஆட்சிபணித்துறை அதிகாரி கோ.பாலச்சந்திரன். இவர் மேற்குவங்க மாநில அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

நான் பரிசளித்த திருவள்ளுவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. ஒவ்வொரு குறளும் ஒன்றே முக்கால் அடியைக் கொண்டவை என்பதால், இந்த திருவள்ளுவர் சிலையும் அதே அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இந்தியஆட்சிபணித்துறை அதிகாரி கோ.பாலச்சந்திரன்.

இந்த திருவள்ளுவர் சிலையில் தாடி, மீசை இல்லாத 40 முதல் 45 அகவை மதிக்கத்தக்கப் புலவராக அவர் உள்ளார். பிரித்தானிய இந்தியாவில், எல்லீஸ் என்ற ஆங்கிலேயர் சென்னை மாநகரத்தின் ஆட்சியராக இருந்தார். அவரது கைக்குத் திருக்குறளின் மூலப்பிரதி ஒன்று கிடைத்துள்ளது. அதைப் படித்த பிறகு, திருக்குறள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகக் குறளின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் லத்தீன் மொழியிலும் மொழிபெயர்த்தார் எல்லீஸ். திருக்குறளின் தாக்கம் காரணமாக அவரது உருவத்தை முதல்முறையாகத் தங்க நாணயத்தில் பொறித்து வெளியிட்டார்.

எல்லீஸ் வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தில் அவர் தாடி, மீசை இல்லாமல் இளம்அகவை தோற்றத்தில் இருப்பார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பரிசளித்த திருவள்ளுவர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருவள்ளுவர் இன்னும் இளம் அகவையுடன் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் எப்படி இருந்தார், அவரது பெயர் உள்பட எந்த விவரங்களும் நமக்குத் தெரியாது. இப்படித்தான் இருப்பார் எனத் தெரியாத ஒரு நபர் குறித்து ஓவியங்கள், சிலைகளை வடிக்கும்போது அவரவர்களின் கற்பனையைக் கலப்பது இயல்பு.

என்னைப் பொறுத்தவரையில், உலகில் உள்ள பெரும்பாலான படைப்பாளிகள், தங்களின் படைப்புகளை இளம் அகவையிலேயே படைத்துவிட்டனர். எடுத்துக்காட்டாக பாரதி, ஆண்டாள், செல்லி, கீட்ஸ், சுந்தரர், சம்பந்தர் எனப் பலரைக் கூற முடியும்.

இந்தக் காரணங்களால்தான் முப்பாலையும் எழுதிய திருவள்ளுவர் தன் இளமைக் காலத்திலேயே மிகச் சிறந்த திறன் கொண்ட புலவராக இருந்திருக்க வேண்டும். அதைக் குறிப்பிடும் வகையிலேயே இளமைக் கோலத்தில் திருவள்ளுவர் சிலையை வடிவமைக்க முடிவு செய்தோம்” என்றார் பெருமிதமான குரலில் ஓய்வு பெற்ற இந்தியஆட்சிபணித்துறை அதிகாரி கோ.பாலச்சந்திரன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,357.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.