Show all

உலகின் முதல் பணக்காரப்பெண் ஆகிறார் நாவலாசிரியர் மக்கின்சி! அமேசான் நிறுவனரிடமிருந்து மணமுறிவு பெறும் அவர் மனைவி

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மற்றும் அவரது மனைவி மக்கின்சியின் 25 ஆண்டு கால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு இப்போது மணமுறிவில் முடிந்துள்ளது. இந்த மணமுறிவு மூலம் அமேசான் நிறுவனத்தில் ஜெப் பிசோஸ் வைத்திருக்கும் பங்கில் பாதி சட்டப்படி மக்கின்சிக்குச் சொந்தம் என்பதால், உலகின் முதல் பணக்காரப் பெண் என்ற இடத்தைப் பிடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. அமேசான் நிறுவனத்தைத் தொடங்கிய நிறுவனர் ஜெப் பிசோஸ், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கின்சி நாவலாசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின்னர் தான் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார் ஜெப். இந்த இணையருக்கு ஒரு தத்துக் குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஜெப் பிசோஸ் மக்கின்சி இடையேயான உறவு முறிவு பெற்றுவிட்டதாக தங்களின் அதிகாரப்பூர்வ கீச்சுத் தளங்களில் செய்தி தெரிவித்துள்ளனர். 25 ஆண்டுகால மணவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக வெளிப்படையாக அறிவித்து உள்ளதால் உலக பணக்காரர்களின் பட்டியலில் பெரும் மாற்றங்கள் உருவாகும்.

அமேசான் நிறுவனத்தில் 16 விழுக்காடு பங்குகள் வைத்துள்ளார் ஜெப். அவற்றின் மதிப்பு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் டாலராகும். சட்டப்படி ஜெப் பிசோசுக்குச் சொந்தமான சொத்துகளில் பாதியளவு, மனைவி மக்கின்சிக்குச் சொந்தமாக உள்ளது. அதில்அமேசான் நிறுவனத்தில் ஜெப் பிசோஸ் வைத்துள்ள பங்குகளும் அடங்கும். எனவே பங்குகளில் பாதியளவு மனைவி மக்கின்சிக்குக் கொடுக்கப்படும்பட்சத்தில் ஆறு கோடியே எண்பது இலட்சம் டாலர் சொத்துக்கு மக்கின்சி உரிமையாளராவார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண்ணாக அவர் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் அடுத்தடுத்த அசுர வளர்ச்சி போன்றவற்றில் கணிசமான பங்களிப்பு மக்கின்சிக்கும் உண்டு. ஆனால், அமேசான் நிறுவனத்தில் பங்குதாரராக அவர் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் தற்போது தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். தற்போது அமேசான் நிறுவனத்தின் 8 விழுக்காடு பங்குகள் மக்கன்சி வசம் செல்ல உள்ளது. இருவரும் மணமுறிவு ஆகும் செய்தி வெளியான அன்று அமேசான் நிறுவனப் பங்குகள் ஏற்றமடைந்து வர்த்தகமாயின. ஆனால் அடுத்த நாள் வர்த்தகத்தில் இறக்கத்தைச் சந்தித்தன.

உலகின் மிகவும் விலைமதிப்புள்ள விவாகரத்தாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் சொத்துப் பிரச்சனை பற்றிய முழு விபரமும் இன்னும் வெளிவரவில்லை. அமேசான் நிறுவனத்தின் நிர்வாக விவகாரங்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும். இருவரும் சுமுகமாக செல்லும்பட்சத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,031.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.