Show all

மக்கள் அங்கிகாரத்தோடு பிறக்குமா நவீன கியூபா! என்று அறிய உலகமே காத்திருக்கிறது. சில மணி நேரங்களில் கிடைக்கும் விடை

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்மைத்துவம் ஆனதும், பிடல் காஸ்ட்ரோவால் விடுதலை பெற்றதுமான கியூபா, தனது புதிய அரசியல் அமைப்பு சாசனத்தின் மீதான பொது வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியிருக்கிறது.

இந்திய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிதான் கியூபா நேரப்படி ஞாயிறு மாலை 6 மணியாகும். அந்த வகையில் நமது நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணி வரை கியூபா மக்கள் இந்த பொது வாக்கெடுப்பின் மீது வாக்கு செலுத்தியுள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்ற பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு: அமெரிக்க ஆதரவு சக்திகளுக்கு எதிராக பெரும் புரட்சி நடத்தி கியூபாவின் அதிகாரத்தை சேகுவேரா உதவியுடன் கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. 

அதன்பின் 16 ஆண்டுகளாக வரை அரசியல் அமைப்பு சட்டமே இல்லாமல், காஸ்ட்ரோவின் புரட்சிகர அரசாகவே இயங்கி வந்தது கியூபா. அதன்பின் 43 ஆண்டுகளுக்கு முன்புதான் கியூபாவுக்கென புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. மக்களிடம் அதற்கென பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 99.02 விழுக்காட்டு மக்களின் ஆதரவோடு அதே ஆண்டு கியூபாவின் அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது.

அந்த அரசியல் சாசனம்தான் முதன்முறையாகப் புதுப்பிக்கப்பட்டு நவீன கியூபாவுக்கான அரசியல் சாசனமாக கடந்த ஆண்டு கியூபாவின் தேசிய அவையில் அங்கீகரிப்பட்டது. 

அதே நாளான நேற்று கியூபாவின் புதிய அரசியல் சாசனத்துக்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்குப் பின் கியூபாவின் அதிபராகப் பொறுப்பேற்றார் ரவுல் காஸ்ட்ரோ. அவருக்குப் பின் கியூபா அதிபராக காஸ்ட்ரோ குடும்பத்தினர் அல்லாத மைக்கேல் டியாஸ் கேனல் கடந்த ஆண்டில் அதிபராகப் பதவியேற்றார். அப்போது, 'கியூபாவின் புதிய அரசியல் சாசனம் நமது நாட்டின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும்' என்று கூறினார். 

கியூபாவின் அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் மிகப் பெரிய மாற்றங்களை, சீர்திருத்தங்களை இந்தப் புதிய அரசியல் சாசனம் முன்வைக்கிறது.

நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே கட்சி கம்யூனிஸ்டு கட்சிதான் என்பதில் பழைய அரசியல் சாசனத்துக்கும் புதிய அரசியல் சாசனத்துக்கும் இடையே எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரசு நிர்வாக முறைகளில் பெரிய அளவு மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

கியூபாவின் புதிய அரசியல் சாசனப்படி தேசிய அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் பதவி என்பது ஐந்து ஆண்டு பதவிக் காலம் கொண்டதாக அமையும். ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. நாட்டின் அன்றாட விவகாரங்களைக் கவனிக்க தலைமை அமைச்சர் பதவி உருவாக்கப்படும். அதிபரால் தலைமை அமைச்சர் நியமிக்கப்படுவார். இப்போது இருக்கும் 15 மாகாண அவைகள் புதிய அரசியல் சாசனத்தில் அகற்றப்படுகின்றன. அதற்குப் பதில் மாகாணங்களுக்கு ஆளுநர், துணை ஆளுநர் நியமிக்கப்படுவார்கள்.

பொருளாதாரத் துறையில் தனியாரின் பங்களிப்பை புதிய அரசியல் சாசனம் உறுதி செய்கிறது. இது கியூபாவின் மிகப்பெரிய மாற்றம். தனியார் தொழில், பண்ணை அல்லாத கூட்டுறவுத் தொழில்கள் முதன்முறையாக கியூபா பொருளாதாரக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. 

அரசு-தனியார் கூட்டுத் தொழில், வெளிநாட்டு முதலீடு ஆகியவை பழைய அரசியல் சாசனத்தில் இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டிருந்தன. இப்போது இவை முதன்மையானவை, அடிப்படையானவை என்ற பட்டியலுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இது கியூபா பொருளாதார சீர்திருத்தம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம், 'கியூபாவில் கடந்த பத்தாண்டுகளில் இன்னும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் நடந்துவரும் மாற்றங்களைச் சட்டபூர்வமாக ஆக்கும் நடவடிக்கைதான் புதிய அரசியல் சாசனம்' என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட சமூக விவகாரங்களிலும் புதிய அரசியல் சாசனம் மாற்றங்களைப் புகுத்தியுள்ளது.

இந்தப் புதிய அரசியல் சாசனம் மீது நேற்று கியூபாவின் 87 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள். திங்கட்கிழமை மாலையில் முடிவுகள் வெளியாகும்.

சோசலிசம் தோற்றுவிட்டது என்று கடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், நேற்று புதிய அரசியல் சாசனத்துக்கான பொது வாக்கெடுப்பில் வாக்களித்த கியூபா அதிபர் மைக்கேல் டியாஸ் கேனல், 'இது கியூபாவுக்கான புதிய அரசியல் சாசனத்தின் மீதான வாக்கெடுப்பு மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்காவுக்குமான, வெனிசூலாவுக்குமான வாக்கெடுப்பும் கூட' என்று ட்ரம்புக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

நவீன கியூபா மக்கள் அங்கிகாரத்தோடு பிறக்குமா என்று அறிய உலகமே காத்திருக்கிறது. அதற்கு இன்னும் சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டதும் விடை கிடைக்கும்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,074.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.