Show all

பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

 உத்தரபிரதேசம் மாநிலத்தில் வருகிற 2017-ம் ஆண்டு நடைபெறஉள்ள சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 403தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 224தொகுதிகளில் வெற்றிபெற்றது.

பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அக்கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றதால், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 231 ஆக உயர்ந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் வெற்றியை தனதாக்கியது. மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 5 தொகுதியிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைத் தழுவியது. மாநிலத்தில் தற்போது பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி இடையிலே தான் கடுமையான போட்டி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள சமாஜ்வாடி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது. சுமார் 172 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்று சமாஜ்வாடி வேலையைத் தொடங்கிவிட்டது.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் யாதவ் பேசுகையில், இந்தத் தொகுதிகளுக்கு சமாஜ்வாடி கட்சி மிகவும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும், என்று கூறிஉள்ளார். வேட்பாளர்கள் வெற்றிபெற குறிப்பிட்ட காலம் தொகுதிகளில் பணியாற்றுவதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

வேட்பாளர்களை நேர்காணல் செய்து பட்டியலைக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்கு அனுப்பி உள்ளோம். தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எனென்றால் அவர்கள் தொகுதியில் பணியாற்ற போதிய காலம் கிடைக்கும், என்று ஷிவ்பால் யாதவ் கூறிஉள்ளார்.

மாநிலத்தில் வகுப்புவாத சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு சமாஜ்வாடி அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக யாதவ் பேசுகையில், பாரதீய ஜனதாவின் இனவாத அரசியல் உத்தரபிரதேசத்தில் பலன்அளிக்காது. மக்களுக்கு அவர்களுடைய உண்மையான முகம் தெரிந்துவிட்டது. என்று கூறிஉள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.