Show all

அதிகரிக்கும் பலியானவர்களின் எண்ணிக்கையும், அதையொட்டி சோகமும்! இலங்கை குண்டு வெடிப்பில் பலி.290

இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், குண்டு வெடிப்பை துப்புத் துலக்கும் முகமாக கைது எண்ணிக்கையும் கூடி வருகிறது. கைது 13பேர்கள்.

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதே நேரத்தில், கொழும்பு அருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து மின்மினி உணவகங்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன. இந்தச் சொகுசு உணவகங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் உணவகங்கள் ஆகும்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். 
இந்த நிலையில், இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 500- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்கச் செய்தான். இதில் 3 காவல்துறையினர் பலியானார்கள். 
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
கொழும்புவில் உள்ள இரண்டு இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,130.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.