Show all

காவல் துறை உயர் அதிகாரி கொடுரம்! வாக்குவாதம் செய்த நபர் ஓடும் காரின் முன் தள்ளி கொல்லப் பட்டார்

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நெய்யட்டின்கரா காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பி.ஹரிகுமார் மீது கேரள காவல் துறை கொலை வழக்கு செய்தது, வாகனம் நிறுத்துவது தொடர்பான வாக்குவாதத்தில் சனல் குமார் என்ற மின்பணியாளரைப் பிடித்துத் தள்ள அப்போது வந்த கார் இவர் மீது ஏறி சனல் குமார் பரிதாபமாகப் பலியானார்.

இந்தக் கொலை திங்கள் இரவு நடந்துள்ளது, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல் துறை உயரதிகாரி ஹரிகுமாரைக் காணவில்லை, அவரைக் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

32 அகவை சனல் குமார் என்பவர் கொடங்கவிலாவில் சம்பவ நாளன்று காவல் துறை உயரதிகாரி ஹரிகுமாரின் காருக்குப் பின்னால் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உணவு விடுதிக்குச் செல்ல முயன்றார்.

தனது காரை எடுக்க இந்த வாகனம் இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த காவல் துறை அதிகாரி ஹரிகுமார், சனல் குமாரை வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளார். உடனடியாக வாகனத்தை எடுக்க வேண்டும் என்று மிரட்டினார். வாகனத்தை சனல் குமார் அங்கிருந்து அகற்றும்போது ஏதோ வார்த்தைகளைக் கூற இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார், சனல் குமாரைப் பிடித்துத் தள்ளினார், அப்போது அங்கு வேகமாக வந்த கார் சனல் குமார் மீது மோதியதில் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.

சனல் குமாரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், பிறகு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் கொண்டு செல்லப்படும்போதே இறந்து விட்டதாக மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறிவித்தனர்.

காவல் துறை அதிகாரி ஹரிகுமாரை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர், ஆனால் அவர் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித் தலைமறைவானார். ஹரிகுமார் சீருடையில் இருக்கவில்லையாம், அங்கு தன் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்தபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து உயரதிகாரியைக் கைது செய்யுமாறு உள்ளூர் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, கடையடைப்புப் போராட்டமும் நடத்தினர்.

முதல்வர் பினராயி விஜயன், அந்த உயரதிகாரி ஹரிகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.