Show all

சீன அதிபருக்கும், தலைமை அமைச்சர் மோடிக்கும்! விருந்தோம்பலுக்கு உலகப் புகழ்பெற்ற தமிழகத்தின் உணவு வகைகள் என்னென்ன

சீன அதிபருக்கும், ஒன்றியத் தலைமை அமைச்சருக்கும்! 

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். குறள்
விருந்தினரை உபசரிப்பவருக்கு அந்த விருந்தோம்பலே வேள்விப் பயன்போல் துணையாக இருக்கும். வேறு துணையே தேவையில்லை. பொருள். 
என்பதாக தமிழகம் விருந்தோம்பலை முன்னெடுக்கிறது.

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்-கிற்கு இன்று இரவு தமிழக உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் - தலைமை அமைச்சர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதற்காக, இன்று தலைமை அமைச்சர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். வழக்கமான இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் நடக்க இருக்கும் ஒப்பந்தம் கையெழுத்து, கூட்டறிக்கை ஆகியவை இந்த வகையான நட்பு அடிப்படையிலான சந்திப்பில் இருக்காது.

சில முதன்மை விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச உள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்கின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு காலை 11.30 மணியளவில் வந்த தலைமை அமைச்சர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் திருவடந்தை வரை உலங்கு வானூர்தியில் சென்று, பின்னர் கார் மூலம் கோவளம் சென்றடைந்தார்.

சுமார் 2 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தார். அவருக்கு பாரம்பரிய கலாசார நடனங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் கார் மூலம் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா உணவகத்திற்குச் சென்றார்.

மாலை 4 மணியளவில் உணவகத்தில் இருந்து கார் மூலம் சீன அதிபர் மாமல்லபுரம் செல்ல இருக்கிறார். அங்கு, தலைமை அமைச்சர் மோடி, சீன அதிபரை வரவேற்கிறார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள், கலை வடிவங்களை பார்வையிடுகின்றனர். இதனை அடுத்து, அங்கு நடக்க உள்ள கலை நிகழ்ச்சியையும் கண்டு களிக்க உள்ளனர்.

இரவு விருந்தில் தலைமை அமைச்சர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ள இருக்கின்றனர். இரு தரப்பில் இருந்தும் 18 பேர் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர். இந்திய உணவு வகைகளுடன், தமிழக உணவுகளான தக்காளி ரசம், அரைச்சிவிட்ட சாம்பார், கடலை குருமா, அல்வா ஆகியவை விருந்தில் இடம் பெற்றுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,302.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.