Show all

ஆதரவும் எதிர்ப்புமான நிகழ்வுகள்! நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல், இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா செனட் உறுப்பினரான புரேசர் அன்னிங் வெளியிட்ட அறிக்கையில்:

எந்த விதமான வன்முறையும் தவறுதான். துப்பாக்கி ஏந்தியவரின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை நியாயப்படுத்த முடியாது என்றாலும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் இஸ்லாமிய மக்கள் அதிகரித்துவருவது சமூகத்தில் எந்த அளவில் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவருகிறது என்பதை இது உணர்த்துகிறது. ஆனால், இடதுசாரிகளும், ஊடகங்களும் இந்தத் தாக்குதலுக்கு துப்பாக்கிச் சட்டங்களும், தேசியவாதக் கொள்கைகளும்தான் காரணம் எனப் பிதற்றுவர். இந்தத் தாக்குதலுக்கு உண்மையான காரணம், இஸ்லாமியர்களை நாட்டினுள் விட்ட குடியேற்ற விதிமுறைகள்தான் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்தக் கருத்துக்கு ஆஸ்திரேலியா தலைமை அமைச்சரான ஸ்காட் மாரிசன் தொடங்கி, உலகமெங்கும் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இது, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. 

இந்நிலையில், நேற்று ஒரு இதழியலாளர் சந்திப்பில் புரேசர் அன்னிங் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு 17 அகவை இளைஞர், இவர் தலையில் முட்டையை உடைத்துள்ளார். இதைத் தனது செல்பேசியில் படம்பிடித்துக்கொண்டே இதைச் செய்துள்ளார். எதிர்வினையாக இளைஞரை அவர் அறைய, அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிலர் தங்கள் செய்ய நினைத்ததைச் செய்ததற்காக, முட்டையுடைத்த இளைஞருக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர். இந்தக் காணொளியே இப்போது சர்வதேச அளவில் அனைத்து சமூக வலைதளங்களிலும் தலைப்பாகியிருக்கிறது.

நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கும், அதன் மீதான எதிர்ப்புக்கும் வலதுசாரியம், இடதுசாரியம் என்று பெயர் சூட்டப்பட்டு விட்டது.

இனி உலகம் முழுவதும் இந்தத் தாக்குலுக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் வலதுசாரிகளாகவும், எதிராகப் பேசுகிறவர்கள் இடதுசாரிகளாகவும் கவனிக்கப் படுவார்கள். தீர்வு கேள்விக்குறிதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.