Show all

திருவள்ளுவர் சிலை அறிவிக்கப்பட்டபடி கங்கைக் கரையில் நிர்மாணிக்கப்படவில்லை

ஹரித்துவாரில் சாதுக்களின் எதிர்ப்பால் இன்று நிறுவப்பட இருந்த திருவள்ளுவர் சிலை அறிவிக்கப்பட்டபடி கங்கைக் கரையில்  நிர;மாணிக்கப்படவில்லை. இதனால் தமிழ் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பெருமையை வட மாநிலங்களில் அறியச் செய்யும் வகையில், திருவள்ளுவரின் சிலையை கன்னியாகுமரி முதல் ஹரித்துவார் வரை கொண்டு செல்வதற்கான இயக்கத்தை,

‘திருவள்ளுவர் கங்கை பயணம்’ என்ற பெயரில் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் மேற்கொண்டார்.

 

கடந்த 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி வந்தது.

 

ரூ.20 லட்சத்தில் நாமக்கல்லில் தயாரான 12 அடி உயரம் கொண்ட இந்தத் திருவள்ளுவர் சிலையை திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

20 சிற்பக் கலைஞர்கள் தொடர்ந்து 35 நாள்கள் பணியாற்றி சிலையை உருவாக்கினர்.

12 அடி உயரம் உள்ள இந்தச் சிலையின் எடை 4.50 டன் ஆகும்.

 

சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கை கரைப் பகுதியில் இன்று பாஜக எம்.பி தருண் விஜயின் முயற்சியினால் நிறுவப்பட இருந்தது.

இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு முக்கியத்தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அறிஞர்கள் பலர் தமிழகத்திலிருந்து சென்றிருந்தனர். குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் மற்றும் ஆளுநரும் கலந்துகொள்வதாக அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது.

ஆனால் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் ஹரித்துவாரில் வசித்துவரும் சாதுக்கள் சிலர் கங்கை நதியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்.

சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்

என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர்.

தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

அதேசமயம் திருவள்ளுவர் சிலை அமைப்பு நிகழ்ச்சியை உத்தர காண்ட் முதல்வர் மற்றும் ஆளுநர் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தில் சிலையை தற்காலிகமாக அமைப்பது என்றும் இன்னும் சில வாரங்களில் அறிவித்தபடி மீண்டும் கங்கைக்கரையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிலை அமைப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.