Show all

வலுக்கும் மக்கள் போராட்டம்! தலைவன் யார் என்று தெரியாமல் தடுமாறும் பிரான்ஸ் அரசு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு, அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில், கலந்துகொண்ட சிலர் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டதால், பொதுமக்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. அந்தக் கலவரத்தில், 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேச அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரூன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், யார் போராட்டத்துக்குக் காரணம், யார் கலவரத்தில் ஈடுபட்டது போன்ற எந்தத் தகவலும் தெரியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர். இதற்கிடையில், மக்கள் போராட்டத்துக்குக் காரணமான எரிபொருள் வரி உயர்வை திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்தும், போராட்டம் இன்னும் ஓயவில்லை. நேற்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். வரி தொடர்பான பிரச்னை தீர்ந்தபோதிலும் அரசுமீது உள்ள பிற அதிருப்திகளால், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். வரும் நாள்களில் இந்தப் போராட்டம் இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரான்ஸ் நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் போராட்டம் தீவிரமடையும் நிலையில், பாதுகாப்பு கருதி பிரான்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம், ஈபிள் கோபுரம், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றை தற்காலிகமாக மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஈபிள் கோபுரம் நாளை முதல் மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.