Show all

அரசியல்மயமாகி விட்ட இலங்கை நீதிபதிகள், போர்க்குற்ற விசாரணைக்கு ஏற்றவர்கள் அல்ல: ஐ.நா.

ராணுவம் ஆக்கிரமித்துள்ள இலங்கை தமிழர்களின் நிலங்களை அவரவரிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் கூறினார்.

 

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் ஜெய்த் அல் உசேன், 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றார். இவர்தான், இலங்கை போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்தவர் ஆவார்.

 

இலங்கையில், தமிழர் பகுதிகளுக்குச் சென்ற ஜெய்த் அல் உசேன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்தார். காணாமல் போன தமிழர்கள் விவகாரத்தை இலங்கை அரசிடம் எழுப்புவதாக அவர் உறுதி அளித்தார்.

 

தனது பயணத்தின் இறுதியில் நேற்று ஜெய்த் அல் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

     இலங்கை அரசு, தனது கடந்தகால தவறுகளை போராடி சரிசெய்ய வேண்டும். இலங்கை ராணுவம், தமிழர்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்த வேண்டும்.

 

போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதன் மூலம், இலங்கை ராணுவம் தன் மீது படிந்துள்ள கறைகளை அகற்ற வேண்டும். மீதி உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது குற்றச்சாட்டு என்ன என்று தெரிவிக்க வேண்டும்.

 

போரின்போது, காணாமல் போனவர்களில் ஏறத்தாழ அனைவருமே இறந்து விட்டதாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறியிருப்பது தமிழர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

யார் யாரெல்லாம் உயிருடன் உள்ளனர், யார் யார் இறந்து விட்டனர் என்பதை கண்டறிய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை அமல்படுத்துவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அரசு தனது வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுவிடும் என்று பலர் அச்சம் தெரிவித்தனர். எனவேதான், இலங்கை அதிபரும், பிரதமரும் இதுகுறித்த உத்தரவாதத்தை நேற்று மீண்டும் என்னிடம் அளித்தனர். அரசியல்மயமாகி விட்ட இலங்கை நீதிபதிகள், போர்க்குற்ற விசாரணைக்கு ஏற்றவர்கள் அல்ல.

 

ஐ.நா. அறிக்கையில் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்து ஆலோசனை நடத்தும் பணியை இலங்கை அரசு தொடங்கி உள்ளது. முழுமையான, வெளிப்படையான, நேர்மையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு ஜெய்த் அல் உசேன் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.