Show all

அக்கு வேறு ஆணி வேறாக துப்பு துலங்கியது இலங்கை குண்டுவெடிப்பு! இலங்கை அதிகார மையத்திற்கு நெருக்கடி

இலங்கையில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதல்களை- இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமக் நியூஸ் ஏஜென்சி மூலம் அறிவித்துள்ளனர்.

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டகளப்பில் அடுத்தடுத்து 8 குண்டுகள் வெடித்தன.
இதில் 3 தேவாலயங்கள், 3 சொகுசு மின்மினி உணவகங்கள் உள்பட 7 இடங்களில் மனித வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.
இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக, இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது, இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன், ஐ.எஸ். பயங்கரவாதிகள், அமக் நியூஸ் ஏஜென்சி மூலம் இலங்கையில் நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளனர். 
மேலும் மின்மினி உணவகங்கள், தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டுகள் நிற்கும் படத்தையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். 
அந்தப் படத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் முகமது ஜக்ரன் என்ற ஜக்ரன் கஸ்மி என்பவன் தலைமையில் 7 தற்கொலை பயங்கரவாதிகள் நிற்பது தெரிய வந்துள்ளது.
இந்த 7 பேரும்தான் கொழும்பு நகரை குறி வைத்து தகர்த்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 7 பேருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை ராணுவமும், காவல்துறையினரும் ஒருங்கிணைந்து சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 மனித வெடிகுண்டு தற்கொலை பயங்கரவாதிகளில் 2 பேர் அண்ணன்-தம்பி ஆவார்கள். அவர்கள் இருவரும் இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகன்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த கோடீஸ்வரர் கொழும்பில் வத்தல் மிளகாய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
அண்ணன்-தம்பி இருவருமே இஸ்லாமிய மத கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணன்- தம்பி இருவரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்துக் கொண்டனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்தத் தொடர்பு கோடீஸ்வரர்களாக திகழ்ந்த அண்ணன்-தம்பி இருவரையும் பயங்கரவாதிகளாக மாற்றி விட்டது.
அண்ணன்-தம்பி இருவரும் பயங்கரவாத இயக்கத்தினருடன் நெருங்கி பழகியது அவர்களது உறவினர்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு மிக மிக கமுக்கமாக அவர்கள் தங்கள் தொடர்பை வைத்து இருந்திருக்கிறார்கள்.
நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்த போது இவர்களும் அதை அறிந்துள்ளனர். தெற்கு ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி செய்தபோது அவர்களுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் ஆதரவாக இருந்துள்ளது.
அதை தொடர்ந்துதான் இலங்கையில் கைவரிசை காட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில்தான் இந்த அண்ணன்-தம்பி இருவரும் தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற சம்மதித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பயிற்சியும் எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கொழும்பில் உள்ள மின்மினி உணவகங்களுக்குச் சென்று ஒத்திகையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அண்ணன்-தம்பி இருவரும் முதலில் சின்னமான் கிராண்ட் உணவகத்திற்குச் சென்றுள்ளனர். பிறகு சங்ரி-லா உணவகத்திற்குச் சென்றுள்ளனர். பணக்கார வீட்டு பிள்ளைகள் என்பதால் மிக எளிதாக அவர்களால் மின்மினி உணவகத்திற்குச் செல்ல முடிந்தது.
சின்னமான் கிராண்ட் உணவகத்தில் ஒருவரும், சங்ரி-லா உணவகத்தில் மற்றொருவரும் அறை எடுத்து சனிக்கிழமை தங்கி உள்ளனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த உணவகத்தில் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தினார்கள்.
மற்ற 5 மனித வெடி குண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களையும் இலங்கை காவல்துறையினர் சேகரித்து உள்ளனர். அவர்கள் பற்றிய விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐ.எஸ்.பங்கரவாத இயக்கம் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதிகளில் 3 பேர் அபுஉபைதா, அபுபாரா, அபு முக்தர் என்று அறிவித்துள்ளது.
இந்த 3 பேரும்தான் சங்ரி-லா, சின்னமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய 3 சொகுசு மின்மினி உணவகங்களைத் தகர்த்தவர்கள் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த 3 பேரில் 2 பேர்தான் கொழும்பு கோடீஸ்வரரின் மகன்கள் என்று கருதப்படுகிறது.
அதுபோல கொழும்பு, நெகோம்பா, மட்டகளப்பு ஆகிய இடங்களில் உள்ள 3 தேவாலயங்களை தகர்த்தவர்கள் அபுஹம்சா, அபு கலில், அபுமுகமது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7-வது மனித வெடிகுண்டாக செயல்பட்டவர் அபுஅப் துல்லா என்று தெரிய வந்துள்ளது.
இவர் கொழும்பில் உள்ள இந்தியரின் உணவகத்தைத் தகர்ப்பதற்காக நுழைந்தார். அந்த சமயத்தில் கொழும்பில் குண்டு வெடித்து பரபரப்பு ஏற்பட்டு காட்டுத்தீயாக தகவல்கள் பரவி இருந்தது.
அந்த சமயத்தில்தான் 7-வது மனித வெடிகுண்டு உணவகத்திற்குள் நுழைய முயன்றது. ஆனால் அங்கு செய்யப்பட்டு இருந்த பலத்த பாதுகாப்பு காரணமாக அவரால் தாக்குதலை நடத்த இயலவில்லை. தன்னை சிலர் சந்தேகத்துடன் பார்ப்பதை அறிந்த அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
கொழும்பு புறநகரில் ஒரு வீட்டுக்குள் அவர் சென்றார். அவரை பிடிக்க காவல்துறையினர் வீட்டுக்குள் புகுந்தபோது அவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து 3 காவலர்களைக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, மட்டகளப்பில் நாசவேலையில் ஈடுபட்ட 7 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகளும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கிர்-அல்- பகததியை சந்தித்துள்ளனர். அந்த படம் தான் நேற்று அந்த அமக் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 7 பயங்கரவாதிகளும் இருக்கும் காணொளிக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கொழும்பை தகர்க்க உறுதி மொழி எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் சதி திட்டம் தீட்டப்பட்டு இலங்கையில் இப்பெருந் தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. 
சிங்களப் பேரினவாதிகள், உரிமை கோரும் தமிழர்களை ஒடுக்கும் இனவாதத்தில் குறியாக இருந்த நிலையில், அங்கே மதவாதம் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட்டு இன்றைக்கு தற்கொலைத் தாக்குதல் பேரழிப்பு வரை படிப்படியாக வளர்ந்திருக்கிறது. 
இனி இலங்கையின் அதிகார மையம் எந்த வகையான தத்துவார்த்த அடிப்படையில் இயங்க முடியும் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. சிங்களம், பௌத்தமத ஆதிக்கம் மட்டுமே இலங்கை அதிகாரம் மையம் என்ற நிலைபாட்டின் மீது கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. இலங்கையில் இனி இந்தியா போன்ற அரசியல் காய் நகர்தல்கள்தாம் செல்லுபடியாகும். என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.