Show all

பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி.

டெல்லி அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் முதியவர் அக்லாக் வீட்டில் உள்ள பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்திற்கு உட்பட்ட தாத்ரி கிராமத்தில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு முகமது அக்லாக் என்பவரது வீட்டில் மாட்டிறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்தது.

அவரைக் கடுமையாகத் தாக்கி தரதரவென தெருவுக்கு இழுத்து கொடூரமாக அடித்து கொன்றது. இந்தச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போதிய நடவடிக்கை எடுக்க நடுவண் அரசு அக்கறை காட்டவில்லை என நாடு முழுவதும் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் சம்பவத்தன்று அக்லாக் வீட்டில் பிரிட்ஜில் இருந்த இறைச்சியை போலீசார் கைப்பற்றினர். அவற்றைத் தடயவியல் சோதனைக்கும் அனுப்பினர். தற்போது அந்த இறைச்சி ஆட்டிறைச்சிதான் என தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் இதன் மற்றொரு பகுதி மதுராவில் உள்ள பரிசோதனைச் சாலைக்கும் அனுப்பப்பட்டு அங்கும் சோதிக்கப்பட்டது. அங்கும் அது ஆட்டுஇறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என உத்தரபிரதேச போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுபான்மை உரிமை ஆணையத்திற்கு இன்னும் அறிக்கை அனுப்பப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

எப்படியிருந்தாலும் அடிப்படையில்லாத வதந்திகளைப் பரப்பி அதன் அடிப்படையில் சுமார் 50 ஆண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது கும்பல் திட்டமிட்டு இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரையில் பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய தினம் கன்று ஒன்று காணாமல் போனது. அன்றைய தினம் சிறுவன் ஒருவன் அக்லாக் வீட்டில் இருந்து அவர் பாத்திரத்தில் இறைச்சி எடுத்து வருவதை பார்த்துள்ளான். மேலும் அதை டிரான்ஸ்பார்மர் அருகில் அவர் அதை வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தச் சிறுவன் மற்றவர்களிடம் அளித்த தவறான தகவலையடுத்துதான் இந்த வதந்தி பரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.