Show all

சிறிசேனாவின் இரண்டு முயற்சிகளும் படுதோல்வி! ராஜபக்சேவை தலைமையமைச்சராக்க முயன்றது; ரணில் விக்ரமசிங்கேவின் கட்சியுடைக்க முயன்றது

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது. 

இலங்கை தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்பு நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் அன்றாடம் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.

ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.

ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது.

ராஜபக்சேவுக்கு எதிராக இரண்டு முறை பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அவற்றை சிறிசேனா ஏற்க மறுத்து, ரணில் இல்லாத ஐக்கியதேசியக் கட்சியை உருவாக்கும் அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தலைமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்;று கொண்டு வரப்பட்டது.

225 உறுப்பினர்க்ளைக் கொண்ட பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் விக்ரமசிங்கே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். 6 உறுப்பினர்களை கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்து விட்டது.

இந்நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் பிரதமராவதற்கு தனக்கு முழுத்தகுதி உள்ளது என்பதை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் நிரூபித்துள்ளார்.

இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திருப்புமுனை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பொம்மை தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கிடைத்த மரண அடியாக கருதப்படுகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,000.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.