Show all

சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது

இந்திய தலைமைக்கு போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், வருங்காலத்தில் சிறிய மற்றும் வேகமுடனான போருக்கு இந்தியா தயாராகி வருகிறது என்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து ஆசிப்பின் பதில் கருத்து வெளியாகியுள்ளது.  ரேடியோ பாகிஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆசிப் பேசும்போது, பாகிஸ்தான் அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளது.  ஆனால் எந்த தாக்குதலுக்கும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என தெரியும் என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதியின் கருத்து குறித்து பேசிய ஆசிப், இந்தியா சிறிய அல்லது நீண்ட போரை தொடுத்திட்டால் அதற்கு சரியான பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முழு அளவில் தயாராகவுள்ளது என கூறியுள்ளார்.  இதற்கு முந்தைய போர்கள் குறித்து அவர் பேசுகையில், கடந்த 1965ம் ஆண்டு இந்திய படைகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் முறியடித்தனர்.

1965ம் ஆண்டில் லாஹூரை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் கனவை எங்களது படைகள் நசுக்கின.  வருங்காலத்திலும் இதனையே நாங்கள் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.  கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிக அனுபவம் மற்றும் செயல் திறனுடன் பாகிஸ்தான் ராணுவம் தற்பொழுது உள்ளது என அவர் கூறியுள்ளார்.  தீவிரவாதத்திற்கு எதிராக பல வருடங்களாக எங்களது படைகள் போரிட்டு வந்துள்ளன.

எந்த சவாலையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.  எனினும், பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளார் என ஆசிப் கூறியுள்ளார்.  சமீபத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எழுந்த பதற்றம் மற்றும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய படைகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூடு ஆகியவற்றை அடுத்து ஆசிப்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.