Show all

வெறிபிடித்த மனநோயாளி போல், முகநூலில் நேரலையாக பதிவேற்றம் செய்து கொண்டே சுட்ட கொடுரம்! 49பேர்கள் பலி; நியூசிலாந்தில்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்து நேரப்படி நேற்று மதியம் 1.45 மணியளவில் ஆயுதத்துடன் மர்ம நபர் ஒருவர் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதிக்குள் நுழைந்து கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு  நடத்தினார். 

இதே போன்று  லின்வுடன் பகுதியில் உள்ள மசூதியிலும் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

அல்நூர் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் படக்கருவி பொருத்திய தலைக்கவசம் அணிந்திருந்தார். படக்கருவி மூலம் தன் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் துடிதுடித்து இறப்பதை, வெறிபிடித்த மனநோயாளி போல் முகநூலில் நேரலையாக பதிவேற்றம் செய்துள்ளார். இணையவாசிகள் காணொளியைப் பார்த்து செய்வதறியாது  பதறிவிட்டதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வளவு பயங்கரமான கோர காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. அந்த காணொளியைப் பகிர வேண்டாம் என காவல்துறை கேட்டு கொண்டது.

தாக்குதல் தொடர்பாக மூன்று ஆண்கள், ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து படையெடுத்து இங்கு வந்து வசிப்பவர்களைப் பழிவாங்கவே இதனைச் செய்ததாக குற்றவாளிகளில் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இவர்கள் அனைவரும் வலதுசாரி தீவிரவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள்.

இந்தக் கோர சம்பவம் பற்றிப் பேசிய  நியூஸிலாந்து  தலைமை அமைச்சர்  ஜாகின்டா அர்டெர்ன், 'இன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல், நியூசிலாந்துக்கு ஒரு கறுப்பு நாள்' என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.  

தாக்குதலுக்குள்ளான லின்வுட் மசூதியில் இமாம்  (மதகுரு) இப்ராஹிம் அப்துல் ஹலீம் இந்த சம்பவம் குறித்துப் பேசுகையில்:

இப்போதும் நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம். எங்கள் நம்பிக்கையை ஒருபோதும் அசைக்க நினைக்காதீர். தொழுகை நடந்து கொண்டிருந்த மசூதியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது அனைவரும் தரையில் படுத்தனர். பெண்கள் கதறல் சத்தம் கேட்டது. பலர் அங்கேயே  இறந்துவிட்டனர். ஆனாலும் நியூசிலாந்து இஸ்லாமிய மக்கள் இந்த தெற்கு பசிபிக் நாட்டை தங்கள் கூடு என்றே நினைக்கின்றனர். எங்கள் குழந்தைகள் இங்குதான் வாழ்கிறார்கள். எங்களுக்கு இங்கு இருப்பதுதான் மகிழ்ச்சி. நியூசிலாந்து மக்களில் பெரும்பான்மையானவர்கள் எங்களுக்கு முழு ஆதரவாக இருக்கின்றனர். ஒற்றுமையாகவும் இருக்கின்றனர்.  இன்று என்னைப் பார்த்த மக்கள், என்னிடம் ஓடி வந்து என்னை கட்டித் தழுவி தங்களின் அன்பையும் ஆறுதலையும் வெளிப்படுத்தினர்.

தொழுகையில் ஈடுபட்ட ஏராளமான இஸ்லாமியர்களைக் கொல்வதன்மூலம் நியூசிலாந்து நாட்டின் மீதான எங்கள் நேசத்தைச் சிதைத்துவிட முடியாது.  சக மக்களோடு நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைத்து விட முடியாது என்று தெரிவித்தார்.

நியூசிலாந்தில் மசூதிகளின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல், சக மனிதர் மீதான வெறுப்புணர்ச்சியின் உச்சம் என்றே சொல்லலாம். 49 பேரைப் பலிகொண்ட இந்த தாக்குதல் இஸ்லாமிய மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,093.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.