Show all

இயற்கையின்கொடையாய் 233 பயணிகள் காப்பாற்றப் பட்டனர்! இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்ட விமானம்

இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்டது விமானம். சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை வயல் பகுதியில் தரையிறக்கிய நிலையில்; 233 பயணிகள் உயிர் தப்பினர்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  இரசிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அ321 வகை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 233 பேர் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சில பறவைகள் விமானத்தின் 2 விசைப்பொறிகளில் மோதின. இதனால் விமானத்தில் தீப்பிடித்தது. இதை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்பிச் சென்று தரையிறக்க முடிவு செய்தனர்.

அதன்படி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துவிட்டு, விமானநிலையத்தை நோக்கி விமானம் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் அதற்குள் விமானத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியதால் விமான நிலையத்துக்கு முன் 1 கிமீ தொலைவில் உள்ள வயல்வெளியில் விமானம் தரையிறக்கப்பட்டது.

கரடுமுரடான பகுதியில் தரையிறங்கியதில் விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் சிறுவர்கள் உள்பட 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் இருந்து 2 உலங்கு வானூர்திகள், மீட்பு குழுக்கள் மற்றும் சடுதிவண்டிகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை விரைவாக தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் இயற்கையின் கொடையாய் உயிர்தப்பினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,246.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.