Show all

சிரியாவிற்கு ரஷியாவின் ராணுவ உதவிகள்; அதிகரித்து வருவதாக அமெரிக்கா கவலை

சிரியாவில் அரசுக்கு ஆதரவாக 28 ரஷியப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

சிரியாவின் லடாகியா மாகாணத்திலுள்ள விமான தளத்தில் ரஷியாவுக்குச் சொந்தமான 28 தாக்குதல், குண்டு வீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, எதிரிகள் மீது தாக்குதல் நிகழ்த்தவும், வீரர்கள், ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் கூடிய 20 ரஷிய ஹெலிகாப்டர்கள் சிரியாவில் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ரஷியாவுக்குச் சொந்தமான ஆளில்லா விமானங்களும் சிரியாவில் இயக்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு ரஷியா அளித்து வரும் ராணுவ உதவிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அமெரிக்கா கவலை தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

சிரியா அரசுக்கு ரஷியா ஆதரவு அளிப்பதால், உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் சிரியாவில் மேலும் பல கிளர்ச்சியாளர்கள் பயங்கரவாதிகளுடன் இணைவார்கள் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

எனவே, ரஷியாவின் நடவடிக்கைகள் சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதில் சிக்கலை அதிகரிக்கவே செய்யும் என அமெரிக்கா கூறி வருகிறது.

சிரியாவிலும், இராக்கிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும், அந்தப் போரில் சிரியா அரசுப் படைகளை இணைத்துக் கொள்ளுமாறு ரஷியா வலியுறுத்தி வருகிறது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும், அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படையினரும் கடுமையாகப் போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.