Show all

நாடளுமன்றத் தேர்தலில், நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களில், இருபது பேர்கள் பெண்கள்! இருபது பேர்கள் ஆண்கள்!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 20 ஆண், 20 பெண் என சரிபாதியாக வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறார். 

இந்தியக் கட்சிகள் எதுவும் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. சொல்லப் போனால், எந்த மாநிலத்துக்கும் தேவையில்லை என்பதுதான் எங்களுடைய கொள்கை முடிவு. இதே மனநிலை சந்திரபாபு நாயுடுவுக்கும் இருக்கிறது. தம்பி பவன் கல்யாணுக்கும் இருக்கிறது. 

பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தவித கொள்கை வேற்றுமையும் இல்லை. இரண்டும் ஒரே கொள்கையைக் கொண்ட கட்சிகள்தாம். பொருளாதாரம், வெளியுறவு ஆகிய விவகாரங்களில் அந்த இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். பாபர் மசூதியை பாஜக தொண்டர்களும் ஆர்.எஸ்.எஸ்காரர்களும் இடித்தார்கள். அதை இடிப்பதற்கு அனுமதித்தது காங்கிரஸ் கட்சி. 

பாபர் மசூதி இடிப்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் சொல்லவில்லை. ஆந்திராவில் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரமாக இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும் இரண்டு கட்சிகளின் கருத்தும் ஒன்றுதான். 

ஆடுதாண்டும் காவிரியில் கர்நாடகாவின் அத்துமீறல் விவகாரம், ஏழு பேர் விடுதலை என உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திமுக, அதிமுகவை எப்படி வேறு வேறாகப் பார்க்க முடிவதில்லையோ, அதேபோல்தான் பாஜகவும் காங்கிரசும். திமுக, அதிமுகவுக்குத் தெரியாமல் ஸ்டெர்லைட் வந்துவிட்டதா? இரண்டு கட்சிகளின் அனுமதியும் இல்லாமல் கூடங்குளத்தில் அணுஉலை வந்துவிட்டதா? கெயில் குழாய் பதிப்பதற்குத் திமுக உத்தரவிட்டால், அதை எதிர்ப்பதற்கு அதிமுக என்ன செய்தது? இரண்டு பக்கத்திலும் ஊழல் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. சாராய ஆலைகளை இரண்டு தரப்பினரும் நடத்துகிறார்கள். நான்கு கட்சிகளுமே தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்! 

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் சம தராசில் வைத்துத்தான் பார்க்கிறோம். இந்த அமைப்பையே மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இந்தியக் கட்சிகள் நமக்குத் தேவையில்லை. தஞ்சை மண்டலத்தை சார்ந்துதான் மொத்த மாநிலமும் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். இதற்காக இந்தியாவின் தலைமை அமைச்சர் சிறு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. உரிய நிவாரணத்தையும் ஒதுக்கவில்லை. வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கு உடனே 500 கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கிறார்கள். 4.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத் தீவுக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்குகிறார்கள். எங்கள் வரிப்பணத்தில் இருந்துதான் அவர்களுக்குப் பணம் கொடுத்தார்கள். கழிமுக மக்களுக்கு எந்தவித உதவிகளும் வந்து சேரவில்லை. மோடியால்தான் வரவில்லை. இங்கே கருணாநிதி சிலையைத் திறக்க வந்த ராகுலும் சோனியாவும் அந்த மக்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இவர்களை எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வது?

'என்னோடு அணி சேர யார் வருவார்கள்' இந்த அமைப்பையே நான் கேள்வி கேட்கிறேன். என்னோடு யாரும் வர மாட்டார்கள். நான் தற்காலிக தோல்விக்குப் பயந்து எதிர்கால வெற்றியைக் கைவிடத் தயாராக இல்லை. யாரோ வைத்த மரத்தில் பழம் விழுமா என நான் பார்க்கவில்லை. இவர்களுக்குப் பதவி இல்லையென்றால், கட்சி நடத்த மாட்டார்கள். நான் பதவியை வைத்து கட்சியை நடத்துபவன் இல்லை. கட்சியைக் காப்பாற்றுவதற்காக லட்சியத்தை அடமானம் வைக்க விரும்பவில்லை. இந்தக் கட்சிகளிடம் கேட்பதற்கு எனக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. 

நாங்களே களத்தில் நிற்கப் போகிறோம். இந்தக் கட்சிகளை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு கருத்துப் பரப்புதல் செய்ய இருக்கிறோம். 'எங்களைப் பற்றிக் கவலைப் படாவர்களுக்கு எங்களுடைய வாக்குகளை எதற்காக அளிக்க வேண்டும்' அந்தக் கருத்தை முன்வைத்து நாங்கள் களத்தில் நிற்போம். எனவே, தனித்தே போட்டியிடுவோம். ஆண்கள் 20 பேர், பெண்கள் 20 பேர் என வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். மக்கள் எங்களுக்கு ஓட்டு போடுகிறார்களோ இல்லையோ எங்களுடைய சமூகக் கடமையாக இதைச் செய்கிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,018.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.