Show all

மீண்டும் சுருண்டது நாயின்வால்! ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமை அமைச்சராக்கும் திட்டம் இல்லை: அதிபர் சிறிசேனா கூற்று

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் திங்கட் கிழமைக்குள் புதிய தலைமைஅமைச்சர் தேர்வு செய்யப்படுவார் எனவும், ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமைஅமைச்சர் ஆக்கும் திட்டம் இல்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இலங்கையில் தலைமைஅமைச்சராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய தலைமைஅமைச்சராக நியமித்தார். 

இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார்.

இதை உச்ச அறங்கூற்றுமன்றம் ரத்து செய்தது. மேலும் ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவை செயல்படஇடைக்கால தடை விதித்தது. 

நாடாளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்றம் சிறிசேனாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என நேற்று; தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய சிறிசேனா, உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

ஆனால் மீண்டும் சுருண்ட நாயின் வாலாக- இலங்கையின் புதிய தலைமைஅமைச்சரைத் திங்கட் கிழமைக்குள் தேர்வு செய்வேன் என தெரிவித்த மைத்திரி ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமை அமைச்சராக ஒருபோதும் நியமிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'இலங்கையை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்றவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அந்த கட்சிக்கு எதிரான அமைப்புகளை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளதுடன், இந்த கட்சியுடன் இணைந்து மீண்டும் அரசை அமைப்பதற்கு முயலக்கூடாது என இலங்கை சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவரை மீண்டும் தலைமை அமைச்சராக நியமிக்கமாட்டேன் என அதிபர் சிறிசேனா அறிவித்து இருப்பது ஐக்கிய தேசிய கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இலங்கையில் தலைமைஅமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளார். இது குறித்து அவரது மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே நேற்று தனது கீச்சுவில் 'இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு தனது தலைமைஅமைச்சர் பதவியை விட்டு விலகுவார்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவையின் செயல்பாட்டுக்கு தடை விதித்து முறயீட்டு அறங்கூற்றுமன்றம் அளித்த உத்தரவை, நேற்று உறுதி செய்த உச்;ச அறங்கூற்றுமன்றம் இந்த வழக்கின் விரிவான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என அறிவித்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.