Show all

அதிரடியாக நடத்தப் பட்ட ராஜபக்சே, சிறிசேனா கூத்துப் பட்டறைக்கு மூடுவிழா! இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சவுக்கு எதிராக, வாக்களிக்க உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்துவந்த, ரனில் விக்ரமசிங்கேவை கடந்த கிழமை அடவடியாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா நீக்குவதாக அறிவித்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை தலைமை அமைச்சராக அறிவித்து பதவி ஏற்பும் நடத்தி வைத்தார்.

இந்நிலையில் தனக்கு முழு பெரும்பான்மை இருப்பதால் தன்னை நீக்கம் செய்தது செல்லாது என்று ரனில் போர்க்கொடி தூக்கி வருகிறார். அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ரனில் மீண்டும் பதவிக்கு வந்தால் ஒரு கணம்கூட நான் பதவியில் இருக்க மாட்டேன் என்று சிரிசேனா தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சிரிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 95 இடங்களை மட்டுமே பெற்றது. தற்போது அதிபர் சிறிசேனா அதிகாரத்தைப் பயன்படுத்தி ரனில் விகரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை நியமித்துள்ளார். 

இந்நிலையில் ரனில் விக்ரமசிங்கேவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரை இழுத்து அவருக்கு அமைச்சர் பதவியை ராஜபக்சே வழங்கினார். ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரையும் இழுக்க முடியவில்லை. இந்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் நடத்திய கூட்டத்தில் ராஜபக்சேக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர்.

இன்று கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிக்கையாக தமிழில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த, கிழமை அதிபர் சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

 

1. இலங்கை அரசியலமைப்பின்படி பதவியிலிருக்கும் தலைமை அமைச்சரை பதவி நீக்கம் செய்தவற்கான அதிகாரம் அதிபரிடம் இல்லை. 19-ம் திருத்தத்திற்கு முன்னர் அதிபருக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19-ம் திருத்தத்தின் மூலம் திட்ட வட்டமாக நீக்கப்பட்டது. ஆகையால் தலைமை அமைச்சரை நீக்குவதாகவும், வேறொரு தலைமை அமைச்சரை நியமிப்பதாக பிரகடனப்படுத்தி அதிபர் வெளியிட்ட அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானதும், சட்ட விரோதமுமானதாகும்.

2. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விடுவித்த பிரகடனத்தை ஜனநாயக விரோத செயலாக பார்க்கிறோம். பெரும்பான்மை இல்லாத ஒருவரை தலைமை அமைச்சராக அறிவித்து அவர் பெரும்பான்மையை நிரூபிக்க தாமதம் செய்ய எடுக்கப்பட்ட கால நீடிப்பே இதுவாகும். இதை பயன்படுத்தி அமைச்சர் பதவிகளையும் பணத்தையும், லஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கம் முறைகேடாக இழுத்து பெரும்பான்மை பெற முயற்சிப்பதை கண்டிக்கிறோம்.

 

3. இந்த காரணங்களுக்காக ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நடுநிலை வகிப்பது என்பது அராஜகம், வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கும் ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,960.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.