Show all

போப் ஆண்டவரும், ஆர்த்தோடக்ஸ் தலைவரும் சந்தித்த நிகழ்வு

கி.பி.1054-ல், கிறிஸ்தவ மதம் போப் ஆண்டவரை தலைமையாக கொண்ட லத்தீன் திருச்சபை எனவும், ஆர்த்தோடக்ஸ் சபை எனவும் இரண்டாகப் பிரிந்தது. இந்த இரு சபைகளையும் இணைக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வரும் நிலையில், ஆர்த்தோடக்ஸ் சகோதரர்களை சந்தித்து கட்டித்தழுவ ஆவலாக இருப்பதாக சமீபத்தில் போப் பிரான்சிஸ் கூறியிருந்தார்.

 

தற்போது மெக்சிகோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் பிரான்சிஸ், இதற்காக கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்த்தி விமான நிலையத்துக்கு சென்றார். இதைப்போல ரஷிய ஆர்த்தோடக்ஸ் தலைவர் கிரில்லும் பராகுவே, பிரேசில் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரும் ஹவானா விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 

இவர்கள் இருவரையும் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ தனித்தனியாக வரவேற்றார். இதைத்தொடர்ந்து போப் பிரான்சிசும், ரஷிய ஆர்த்தோடக்ஸ் தலைவர் கிரில்லும் விமான நிலையத்திலேயே சந்தித்துக்கொண்டனர். அப்போது ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்டனர்.

 

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிரான பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர். சுமார் 1000 ஆண்டுகளுக்குப்பின் போப் ஆண்டவரும், ஆர்த்தோடக்ஸ் தலைவரும் சந்தித்த நிகழ்வு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.