Show all

அபினந்தன் படத்துடன் பாகிஸ்தான் கடைக்காரர், தேநீருக்கு விளம்பரம்! 'சுவையான தேநீர், இது எதிரியைக் கூட தோழனாக மாற்றும்'

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அங்கே கையில் தேநீருடனும் மனதில் தைரியத்துடனும் அவர் பேசிய காணொளி, உலகம் முழுவதும் உச்சமானது.

அந்தக் காணொளியில் எதிரி நாட்டிடம் பிடிபட்டாலும் நெஞ்சுரத்தோடு தமிழக விமானி அபிநந்தன் பேசுவார். பாகிஸ்தான் ராணுவம் கேட்கும் சில கேள்விகளுக்கு, 'மன்னிக்கவும் இதற்கு நான் பதிலளிக்கக் கூடாது!' என்று தெரிவிப்பார்.

எதிரிகளிடம் இருப்பது தெரிந்தும் பயப்படாமல் துணிச்சலாகப் பேசிய தமிழர் அபிநந்தனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் ரசிகர்கள் உருவாகினர். அவரின் பெயர் ஏராளமான குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன. அவரின் மீசை இளைஞர்கள் நடுவே பிரபலமானது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தேநீர்கடைக்காரர் ஒருவர், அபிநந்தனின் புகைப்படத்தோடு ஓர் அசத்தல் செய்தியை அச்சிட்டுள்ளார். இதன்மூலம் அவரின் தேநீர் விற்பனையை அதிகப்படுத்தி உள்ளார்.

அந்தச் செய்தி உருதுவில் எழுதப்பட்டுள்ளது. அதில், 'சுவையான தேநீர், இது எதிரியைக் கூட தோழனாக மாற்றும்' என்று கூறப்பட்டுள்ளது.  இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தேநீர்கடைக்காரரின் விளம்பர உத்தியைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அபினந்தனை வைத்து நம்மா பாஜக செய்த வேலையைப் பாருங்கள்:

அபிநந்தன் புகைப்படத்துடன் கூடிய பாஜக விளம்பரத்தை நீக்க வேண்டும் என்று முகநூல் நிறுவனத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக பாதுகாப்புப் படை வீரர்களையோ விளம்பரங்களில் அவர்களது புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், டெல்லியின் விஸ்வாஸ் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான ஓம் பிரகாஷ் சர்மா, முகநூலில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.

அதில், 'அபிநந்தன் நாடு திரும்பியது மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, பாகிஸ்தான் அடிபணிந்தது, நாட்டின் துணிச்சலான வீரர் நாடு திரும்பி உள்ளார்' என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரங்களுடன் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, அபிநந்தன் ஆகியோருடன் சர்மாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து 'சிவிஜில்' என்ற செயலி மூலம் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், விளக்கம் அளிக்குமாறு சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் கவன அறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் இந்த விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு, முகநூல் (இந்தியா மற்றும் தெற்கு ஆசியா) இயக்குநர் ஷிவ்நாத் துக்ராலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட வேண்டியது எங்கள் கடமை என துக்ரால் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.