Show all

ப.சிதம்பரம், காங்கிரஸ் மீது சிவசேனா கடும் விமர்சனம்

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளதை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

 

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் வெளியாகியுள்ள கட்டுரையின் விவரம்:

 

முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம், ‘ஏர்செல் - மேக்சிஸ்’ ஒப்பந்தத்துக்கு முறைதவறி அனுமதி கொடுத்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

 

அதோடு முறைகேட்டில் ஆதாயமடைந்ததாக கூறப்படும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை குறித்து, அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

 

அதேபோல், இஷ்ரத் ஜஹான், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி இல்லை என நிரூபிப்பதற்காக, நடுவண் உள்துறை அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரத்தை மாற்றியது தொடர்பான சர்ச்சையிலும் ப.சிதம்பரம் சிக்கியுள்ளார்.

 

இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால், ப.சிதம்பரத்தை மகாராஷ்டிராவில் திணித்திருப்பதன் மூலம், காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது என்றே தோன்றுகிறது. காங்கரஸுக்கு இன்னமும் தெளிவு பிறக்கவில்லை.

 

மாநிலங்களவைக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது, காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரமாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத ப.சிதம்பரத்தை, மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிடவைத்து, காங்கிரஸ் பெரிய தவறு செய்துள்ளது.

 

மாநிலங்களவையில் காங்கிரஸ் மீதான தாக்குதல்களைச் சமாளிக்கவே சிதம்பரமும், கபில்சிபலும் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், உண்மையில், சோனியா மற்றும் ராகுல்காந்தியைப் பாதுகாக்கவே இவர்கள் இருவரும் வேட்பாளராக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.