Show all

அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா கண்டித்தது.

அணுசக்தி வளத்தை கொண்டுள்ள நாடுகள் ‘என்.எஸ்.ஜி’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அணுமூலப் பொருட்களை வினியோகம் செய்தும் வருகின்றன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் பாகிஸ்தான் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவு துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அணுசக்தி நாடுகள் வரிசையில் சேர இந்தியா விண்ணப்பித்து இருக்கிறதே, இது இந்த பிராந்தியத்தில் அணு ஆயுத போட்டியை ஏற்படுத்தாதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மார்க் டோனர்,

‘இது ஆயுத போட்டி தொடர்பான விஷயம் அல்ல. அதேபோல் அணு ஆயுத போட்டியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அணுசக்தியை பொதுப் பயன்பாட்டுக்கு அமைதியான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்’ என்று கண்டிப்புடன் கூறினார்

 

என்.எஸ்.ஜி.யின் 48 நாடுகள் கூட்டத்தில் இதுபற்றி முடிவு எட்டப்படுமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் கூறியதாவது:

2015-ம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த ஒபாமா இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கருத்தை உறுதியாக தெரிவித்து இருந்தார். அதில் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு நிர்வாகம் தொடர்பான தேவைகளை இந்தியா பூர்த்தி செய்து இருக்கிறது என்றும், இந்தியா என்.எஸ்.ஜி. நாடுகள் வரிசைக்கு தயாராக இருக்கிறது எனவும் கூறி இருந்தார்.

 

அணுசக்தி நாடுகள் என்பது ஒரு மனதாக முடிவை எடுக்கும் அமைப்பைக் கொண்டது. எனவே, பொறுத்திருப்போம். இதில் எப்படி ஓட்டெடுப்பு இருக்கும் என்பதையும் பார்க்கவேண்டும். புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்பது சிந்தித்து முடிவு செய்யவேண்டிய விஷயம். தவிர, இது தற்போது உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் உள்விவகாரம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.