Show all

அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் போர்விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் காலாவதியானது

     அமெரிக்காவிடமிருந்து 8எஃப்-16 ரக போர் விமானங்களை வாங்கும் சுமார் 700 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் காலாவதியானதால், பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

மே 24-ம் தேதிக்குள் பாகிஸ்தான் இந்த ஆயுதக் கொள்முதலுக்கான ‘ஏற்புக் கடிதம்’ அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணம் அனுப்பப்படாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.

 

ஆனால், உண்மையான பிரச்சினை என்னவெனில் இந்த 700 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் அமெரிக்க அயல்நாட்டு ராணுவ நிதித்திட்டத்தின் கீழ் பாதித் தொகையை அமெரிக்கா ஏற்க வேண்டும். ஆனால் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் முழுத்தொகையையும் செலுத்தி எஃப்.16 போர் விமானங்களை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது.

 

பாகிஸ்தான் மண்ணில் ஹக்கானி பயங்கரவாத வலைப்பின்னலை அழிக்க பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, இந்நிலையில் மானிய விலையில் எப் 16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்கக் கூடாது என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை முட்டுக்கட்டை போட்டது.

 

அதாவது 270 மில்லியன் டாலர்களில் பாகிஸ்தானுக்கு முடிந்திருக்க வேண்டிய ஒப்பந்தம் தற்போது முழுத்தொகையையும் செலுத்தினால்தான் முடியும் என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

 

நிபந்தனைகளை பாகிஸ்தான் ஏற்க மறுத்ததோடு, தேசிய நிதியத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகையை செலவிடப் பாகிஸ்தான் இப்போதைக்குத் தயாராக இல்லை என்று; அரசு உயரதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக டான் ஊடகம் தெரிவித்துள்ளது.

 

ஆனாலும், ஏற்புக் கடிதத்தை அனுப்பாமல் பாகிஸ்தான் தவறு செய்துவிட்டதாக மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர், முதலில் ஏற்புக் கடிதத்தை பாகிஸ்தான் அனுப்பியிருந்தால், மானிய விலை விவகாரத்தை பேசி முடித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

இந்நிலையில்தான் கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமரின் அயலுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஜ் அமெரிக்க போர் விமானம் இல்லையெனில் வேறு நாட்டிடமிருந்து பெற வேண்டியதுதான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ரஷ்யா அல்லது சீனாவை பாகிஸ்தான் அணுகலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.