Show all

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் வரும் ஜுன் மாதம் முதல் தேதி திறக்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜுன் மாதம் முதல் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் இன்று தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

ஆரம்ப, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என பிரிக்கப்பட்டு தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

 

அரசு பள்ளிகளில் 3 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளியில் 2½ லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

 

ஏப்ரல் மாதம், இறுதி வரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் 1-ந்தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.

 

ஆனால் கோடை வெயில் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கடுமையாக தாக்கி வருகிறது. வெப்ப காற்று வீசுகிறது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

 

சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. 100 டிகிரிக்கு மேலாக கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

 

இதன் காரணமாக பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்-பெற்றோர் நல சங்கமும் ஆசிரியர் கூட்டணியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழ் நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் முதல்-அமைச்சருக்கு வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

 

தமிழகத்தில் 107 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனல் காற்றுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள்.

 

1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.

 

எனவே மாணவர்களின் நலன் கருதி வெயிலின் அளவு குறையும் வரை ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். தலைமை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளருடன் நடந்த ஆலோசனையில் கடந்த 5 வருடங்களில் பள்ளிகள் எந்தெந்த தேதிகளில் திறக்கப்பட்டது, வெயிலின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

 

இதற்கிடையில், புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெப்பத்தின் எதிரொலியாக பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

அதுபோல தமிழகத்திலும் ஒத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக, பிரபல நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின.

 

இந்நிலையில், ஏற்கனவே அரசு அறிவித்திருந்தபடி ஜுன் மாதம் முதல் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது. மாணவ-மாணவியருக்கான இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஜுன் முதல் தேதியன்றே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.