Show all

இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு நவாஸ் ஷெரீஃப் வருத்தம்

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார்.

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் அரங்கேற்றியதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது.

 

மேலும், இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ள அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மெலானா மசூத் அசார் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது.

 

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைத் துறையின் கூடுதல் ஐ.ஜி. தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை அமைத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டார்.

 

இந்த நிலையில், பதான்கோட் விவகாரம் தொடர்பாக அவர், லாகூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் பாகிஸ்தான் வருகைக்குப் பின்னர், இந்தியாவுடனான பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி சரியான திசையில் பயணித்துக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில், எங்களது இம்முயற்சியை சீர்குலைக்கும் நோக்கில், பதான்கோட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டிருந்தால், அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தண்டிக்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் பொறுப்பாகும்.

 

இதனைக் கருத்தில்கொண்டு பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பான பாகிஸ்தான் தரப்பு விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, அதுதொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் என்று நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

 

யாரும் கைது செய்யப்படவில்லை: இதனிடையே, பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது குறித்து, பஞ்சாப் மாகாண சட்டத் துறை அமைச்சர் ராணா சானாவுல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

 

அதற்கு, பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

 

இந்த விவகாரத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சானாவுல்லா பதிலளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.