Show all

தனது டுவிட்டரில் கெஜ்ரிவால் மீண்டும் நடுவண் அரசு மீது பாய்ந்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான

ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் அங்கு நடுவண் பாஜக அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

டெல்லியின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை நடுவண் அரசின் வசம் இருப்பதால் தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு கைது செய்யும் படலங்கள் தொடர்பாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். அதே போல் டெல்லியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்காமல் நடுவண் அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல்துறை இது போன்ற சம்பவங்களைத் தடுக்க தவறினால் ஆம் ஆத்மி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்தார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் போது கவர்னர் நஜீப்பும், பிரதமர் மோடியும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று சவால் விட்டார். இந்தச் சூழலில் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனது டுவிட்டரில் கெஜ்ரிவால் மீண்டும் நடுவண் அரசு மீது பாய்ந்துள்ளார். அதில் தொடர்ச்சியாக எழுதியுள்ள பதிவில், மோடி தனது பிடிவாத போக்கை கைவிட வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு, காவல்துறை கட்டுப்பாடு போன்றவற்றில் டெல்லி ஆம் ஆத்மி அரசுடன் இணைந்து செயல்பட முன் வரவேண்டும் அதற்கு நடுவண் அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மோடி மற்றும் நஜீப் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையில் ஊழல் புரையோடி போய் உள்ளது. அதை மோடியால் தடுக்க முடியவில்லை. டெல்லி நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஆம் ஆத்மி அரசு குறைத்துள்ளது. இதுகுறித்து சர்வே ஒன்று தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்றும் கெஜ்ரிவால் சுட்டி காட்டியுள்ளார். மேலும் டெல்லியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரையில் மோடியை நிம்மதியாக உறங்க விடமாட்டோம் என சில நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.