Show all

எந்த இஸ்லாமியரும் இந்தியாவில் வாழ்வதை சிரமமாக உணர்ந்தால் பாகிஸ்தானிற்கு வரலாம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குறித்து பாஜக, தலைவர்கள் கூறி வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது, சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தானுக்கு வந்து விடுங்கள் என ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது.

நவம்பர் 2ம் தேதி 50வது பிறந்தநாளை கொண்டாடிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நாட்டில் தற்போது மதங்களுக்கு எதிரான சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என கூறி இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக, பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், ஷாருக்கான் பாகிஸ்தான் முகவர் போல் செயல்படுகிறார். அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து, அவரை நாடு கடத்த வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.

சாக்ஷி மகராஜ் கூறிய கருத்தின் சர்ச்சை அடங்குவதற்குள் மத்திய பிரதேச பாஜக, தலைவர் கைலாஷ் விஜய்பர்கியா, ஷாருக்கான் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவரது மனம் முழுவதும் பாகிஸ்தானில் தான் உள்ளது. அவரது படங்கள் இங்கு கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், இந்தியாவை சகிப்புத் தன்மை இல்லாத நாடாகவே அவர் நினைக்கிறார் என டுவீட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பி உள்ளது. சாக்ஷி மகராஜ் மற்றும் விஜய்பர்கியாவின் இந்தக் கருத்துக்களுக்காக பிரதமர் மோடி, ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

பாஜக, தலைவர்களின் கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டு வரும் நிலையில், 1993ம் ஆண்டு மும்பை வெடிகுண்டு சம்பவத்தின் மூளையாக இருந்து செயல்பட்டவரும், பாக், பிரிவினைவாத இயக்கத் தலைவருமான ஹபீஸ் சையது தனது டுவிட்டர் பக்கத்தில், ஷாருக்கான் உள்ளிட்ட எந்த இஸ்லாமியரும் சிறுபான்மையினர் என்பதற்காக இந்தியாவில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது இந்தியாவில் வாழ்வதை சிரமமாக உணர்ந்தாலோ அவர்கள் பாகிஸ்தானிற்கு வரலாம். மோடி ஆட்சி செய்யும் இந்தியாவில் மதசார்பின்மை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாத இயக்க தலைவர் ஒருவர் ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.