Show all

அர்ஜெண்டினாவில் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசு

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பாஜக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். 

இந்தக் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, 2022ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதாகத் தெரிவித்தார். 

சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனமான பிபாவின் தலைவர் கியான்னி இன்பான்டினோவை மோடி சந்தித்தார். அப்போது, கியான்னி மோடிக்கு மோடியின் பெயர் அச்சிடப்பட்ட விளையாட்டு மேலாடையைப் பரிசாக வழங்கியுள்ளார்.

பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோவிடமிருந்து இந்த விளையாட்டு மேலாடையைப் பெற்றுக்கொண்டேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கீச்சுவில் பதிவிட்டுள்ள மோடி, அர்ஜெண்டினாவுக்கு வரும்போது கால்பந்தாட்டத்தை நினைக்காமல் இருக்க முடியாது. அர்ஜெண்டினாவின் வீரர்கள் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ளனர். இன்று பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோவிடமிருந்து இந்த விளையாட்டு மேலாடையைப் பெற்றுக்கொண்டேன். என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.