Show all

2 மீனவர்களைச் சுட்டுக்கொன்ற தம் கடற்படை வீரர்களை மீட்க இத்தாலி புது முயற்சி

2 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி இந்தியாவில் இருக்கும் இத்தாலி கடற்படை வீரரை, தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேர் இத்தாலி கடற்படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ‘என்ரிகா லெக்சி’ என்ற இத்தாலி எண்ணெய் கப்பலில் பாதுகாப்புக்காக வந்த அவர்கள், படகில் இருந்த மீனவர்களை துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள்.

 

மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களான மசிமிலானோ லட்டோரி, சல்வாடோர் கிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இத்தாலி அரசு, அவர்களை விடுதலை செய்யுமாறு கூறியது. ஆனால் இந்திய அரசு மறுத்து விட்டது.

கைதான இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீதான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், மசிமிலானோ லட்டோரிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 2014-ம் ஆண்டு இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சல்வாடோர் கிரோன் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

 

இதற்கிடையே, இந்தப் பிரச்சினையை நெதர்லாந்தின் ‘தி ஹேக்‘ நகரில் உள்ள ஐ.நா.அவை நீதிமன்றத்திற்கு இத்தாலி கொண்டு சென்றது. அந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த போது, எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சல்வாடோர் கிரோன் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இது மனித உரிமைகளை மீறும் செயல் என்பதால், அவரை விடுதலை செய்து இத்தாலிக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று இத்தாலி அரசின் சார்பில் வாதிடப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நடந்து இருப்பதால், இந்த வழக்கை இந்தியாவில் விசாரிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இந்திய அரசு தரப்பிலான வாதமும் முன்வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் கடற்படை வீரர் சல்வாடோர் கிரோனை இத்தாலிக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், இது தொடர்பான நிபந்தனைகளை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என்றும் இத்தாலி வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. ஐ.நா.நீதிமன்றம் முதல் கட்டமாக பிறப்பித்து இருக்கும் இந்த உத்தரவு பற்றிய முழுவிவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

என்றாலும் இந்த வழக்கின் தன்மை குறித்து ஐ.நா.நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கும் என்றும், இறுதிதீர்ப்பு எப்போது என்பது பற்றிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 

ஐ.நா. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியமான நடவடிக்கை என்றும், இது குறித்து இந்திய அரசுக்கு இத்தாலி அரசின் சார்பில் தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமர் மாட்டியோ ரென்சி தெரிவித்தார்.

 

இதுபற்றி டெல்லியில் நடுவண் அரசு வட்டாரங்கள் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சல்வாடோர் கிரோன் தற்போது பிணையில் இருப்பதாகவும், அவரது பிணையல் நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பாக இந்திய அரசும் இத்தாலி அரசும் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு தகவல் வந்து இருப்பதாகவும் தெரிவித்தன.

 

விசாரணைக்கு தேவைப்படும் போது அனுப்பி வைக்குமாறு இத்தாலி உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் சல்வாடோர் கிரோன், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் அவரது தாய்நாட்டுக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.