Show all

இந்தியாவுக்கு முற்றுகையா! ஒருபக்கம் இலங்கைக்கு அரசியல் ஆலோசனை. மறுபக்கம் பாகிஸ்தானுக்கு 44 ஆயிரம் கோடி நிதி உதவி

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமைஅமைச்சராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக் கிழமையன்று அவர் பீஜிங் நகருக்கு போய் சேர்ந்தார்.

பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இதற்காக நட்பு நாடுகளிடம் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்கான் நிதி உதவி பெற முடிவு செய்தார். அந்த வகையில் அவர் முதலில் சீனாவின் உதவியை நாட முடிவு செய்தார்.

அவர் முதலில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து நேற்று சீன தலைமைஅமைச்சர் லீ கெகியாங்கை, பீஜிங் நகரில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இம்ரான்கான் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அவரை வரவேற்று லீ பேசும்போது, 
எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற கூட்டாளிகள் என்று சீனாவையும், பாகிஸ்தானையும் அழைக்கலாம். நாங்கள் அந்த நாட்டின்மீது அரசியல் ரீதியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். எல்லா துறையிலும் ஒத்துழைப்பை கொண்டுள்ளோம். சீனாவின் வெளிநாட்டு கொள்கையில் பாகிஸ்தான் எப்போதுமே முன்னுரிமை பெற்ற நாடாக உள்ளது. உங்கள் வருகை நம் இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
லீ கெகியாங்குக்கு நன்றி தெரிவித்து இம்ரான்கான் பேசினார். அப்போது அவர், இரு நாடுகள் இடையேயான உறவு ஆழமாக இருந்து வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் ஒரு யோசனையாக மட்டுமே இருந்தது. இப்போது அது களத்திற்கு வந்துள்ளது. இது எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு உருவாக்கி தந்துள்ளது என்று கூறினார்.

இருவரும் சந்தித்துப் பேசிய பின்னர் சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாடுகளும் வனம், பூமி அறிவியல், வேளாண்மை, தொழில் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. லீ கெகியாங், இம்ரான்கான் சந்திப்புக்கு பின்னர் சீன வெளியுறவு துணை அமைச்சர் கோங் சுவான்யூ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா செய்யும் என கூறினார்.

பாகிஸ்தானுக்கு சீனா ரூ. 44 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் என வெளியாகி உள்ள தகவல் குறித்து கோங் சுவான்யூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா அளிக்கும். இது இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பு குழுக்களும் பேச்சு வார்த்தை நடத்துவர். ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் மாற்றம் இல்லை என்று கூறினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,961.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.