Show all

இரானில் தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை! பொருளாதாரக் குற்றங்களுக்கு கடும் தண்டனை

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி என்ற தொழிலதிபர் கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிடுமென் என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள். பிடுமென் விற்பனை செய்வது இரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழில். சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக நிறுவனங்களின் பெயரில் ஆவணம் தயாரித்திருக்கிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தூக்கிலடப்பட்ட மூன்றாவது தொழிலதிபரானார் 49 அகவை டர்மானி.

கடந்த மாதம் உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக, தங்க நாணயங்களின் சுல்தான் தூக்கிலிடப்பட்டார்.

அறங்கூற்றுத் துறையின் மிஜான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி டர்மானி 'முறைகேடு, மோசடி மற்றும் லஞ்ச ஊழல்' மூலமாக சுமார் பத்து கோடி டாலர் அளவுக்கு பிடுமென் கொள்முதல் செய்திருக்கிறார் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

டர்மானி கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகளை இரான் அரசு தொலைக்காட்சி, ஓரு அதிரடி படத்துக்கான இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பியது.

நாட்டின் தள்ளாடும் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் இவர்கள் சுரண்டுகிறார்கள், அவர்களை அரசு தண்டிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல செய்தியாளார்கள் அத்தொலைக்காட்சியில் மிகவும் ஆர்வம் காட்டினர்.

புதிய புரட்சிகர அறங்கூற்றுமன்றமொன்று அமைக்கப்பட்டது. ஊழல் வழக்குகளை வேகமாக விசாரித்து தீர்ப்பளிப்பது இதன் பணி. அதன்படி பதின்ம தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்தது மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடியது உணரப்பட்டதால் மக்களிடையே பெருங்கோபம் ஏற்பட்டநிலையில் இந்த அறங்கூற்றுமன்றம் அமைக்கப்பட்டது.

இரானின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது. அமெரிக்கா வேறு இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனாலேயே பொருளாதாரக் குற்றங்களின் மீது இவ்வளவு காட்டம் என்று சொல்லப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.