Show all

பாஜக பா.உ. ராம்பிரசாத் சர்மா குதிரையில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்

டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக  பாராளுமன்ற உறுப்பினர் ராம்பிரசாத் சர்மா நேற்று குதிரையில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

ஆனால், மற்றொரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரான மனோஜ் திவாரி, திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மிதிவண்டியில் வந்தார். டெல்லியில், வாகனங்களின் கடைசி எண் அடிப்படையில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட கார்கள் மாற்று நாட்களில் இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்காக டெல்லி மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விதிமுறையை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் இத்திட்டத்துக்கு பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த திங்கட்கிழமை விதிமுறையை மீறி  ஒற்றைப்படை எண் கொண்ட காருக்கு பதிலாக இரட்டைப்படை பதிவு எண் கொண்ட காரில் பாஜ எம்பி பரேஷ் ராவல் நாடாளுமன்றத்துக்கு சென்றார். இதுதொடர்பாக சுட்டுரையில் டெல்லி முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட பரேஷ் ராவல், தான் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராம்பிரசாத் சர்மா நேற்று குதிரையில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

குதிரையில், ‘‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனம்’’ என்று அட்டையில் எழுதி வைத்திருந்தார்.

 

இதேபோல், வடகிழக்கு டெல்லி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி நேற்று மிதிவண்டியில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

அவர் கூறுகையில், ‘‘ஒவ்வொருவரும் இதுபோல் மிதிவண்டியில் பயணம் செய்வதைத் தேர்வு செய்யவேண்டும்.

இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆரோக்கியமான முறையில் பயணம் மேற்கொள்வதற்கான வழியாகும்’’ என்றார்.

இதற்கிடையே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு அளிக்க கோரி டெல்லி அரசு மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.