Show all

தமிழக உரிமைகள் பறிபோகக் காரணமானவர் கருணாநிதிதான்: அன்புமணி

சட்டப்பேரவையில் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசாமல் திமுக அமளியில் ஈடுபடுவது அரசியல் நாடகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியைக் காணவந்த அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 20 நீர்த் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.30 ஆயிரம் கோடிதான் தேவைப்படும். ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் இலவசங்களுக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முதல்வர் தீவிரமாக உள்ளார். ஆகவே தமிழக அரசு அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். காவிரி பிரச்னையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்குமாறு கருணாநிதி கோரியுள்ளார். ஆனால், கச்சத்தீவு மற்றும் காவிரி உள்ளிட்ட அனைத்து பிரச்னையிலும் தமிழக உரிமைகள் பறிபோகக் காரணமானவர் கருணாநிதிதான். விவசாய சங்கங்கள் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் செயல்படுவது சரியல்ல. தமிழக சட்டப்பேரவையில் ஆரோக்கியமான, ஜனநாயக ரீதியிலான விவாதம் நடைபெறவில்லை. காவிரி உள்ளிட்ட தமிழக ஜீவாதார பிரச்னை குறித்து விவாதிக்கவில்லை. திமுக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபடுவது நாடகம். அதிமுகவும் சட்டப்பேரவையை ஜனநாயக ரீதியில், மரபுகளைக் காக்கும் வகையில் நடத்தவில்லை. ஆகவே சட்டப்பேரவை நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவேண்டும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.