Show all

உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில்

உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

செய்தியாளர்களுக்கு ஆபத்தான இரண்டாவது நாடு பிரான்ஸ்.

இந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதை அடுத்து உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் செய்தியாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் இந்த ஆண்டில் மாத்திரம், தமது பணியை செய்ததற்காக பிரான்ஸில் மொத்தம் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பட்டியலில் முதலாவது இடத்தில் சிரியா உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் தமது தொழில் காரணமாக மொத்தமாக 69 செய்தியாளர்கள் பலியாகியுள்ளதாக சிபிஜே எனப்படும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

அதில் 40 வீதமானோர் அதாவது 28 பேர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

இராக், பிரேசில், வங்கதேசம், தென் சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு குறைந்தது 5 செய்தியாளர்களாவது கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 23 வரை தமது பணியைச் செய்ததற்காக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் .

2014 இல் இவ்வாறு பலியாகியிருந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 61 என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மரணமடைந்திருந்த செய்தியாளர்களில் குறைந்தது 26 பேரின் இறப்பு அவர்களது தொழில் காரணமாகவா ஏற்பட்டது என்பது குறித்து சிபிஜே விசாரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் மொத்த தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் சிரியா உள்ளது.

இந்த ஆண்டில் 13 ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவாகும்.

இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக் கொள்ளும் குழு சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியை விஸ்தரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கடமையாற்றும் செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை இதற்கு காரணம் என குறிப்பிடும் சிபிஜே, அங்கு நடைபெறும் வன்முறைகளைக் கண்காணிப்பதில் நிலவும் சிரமம் அதிகரித்துள்ளமையும் இதற்கு காரணங்கள் என தெரிவித்துள்ளது.

போர் காரணமாக அல்லலுறும் லிபியா, ஏமன், இராக் போன்ற ஏனைய நாடுகளில் தகவல்களை கையாள்வதில் கட்டுப்பாடுகள் உள்ளமையும் உலகளவில் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணிக்கமுடியாமல் உள்ளமைக்கு காரணமாக இருக்கலாம்.

உலகளாவிய ரீதியில் தமது தொழில் காரணமாக இலக்கு வைத்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், மோதல்களில் இடையில் அகப்பட்டு பலியான செய்தியாளர்கள் மற்றும் ஏனைய ஆபத்தான செய்திப் பணிகளின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்களையும் சிபிஜே வெளியிட்டுள்ள இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.