Show all

பிரதமர் மோடி, இன்று கோவை வருகிறார்

பிரதமர் மோடி, இன்று கோவை வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, ஆறாயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பா.ஜ.,வின் இருசக்கர வாகன சாதனை பிரசாரம் நேற்று தொடங்கியது.

கோவை, வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி, புறநோயாளி கட்டடம், 24 மணி நேர சேவை மைய கட்டடங்களைத் திறந்து வைக்க, கேரள மாநிலம், கோழிக்கோட்டிலிருந்து, இன்று பகல் 1.30 மணிக்கு, தனி விமானத்தில் பிரதமர் மோடி கோவை வருகிறார்.

இதன்பின், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள், கோவை ஆட்சியர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

 

பிரதமர் பயணத்துக்காக குண்டு துளைக்காத மூன்று கார்கள், கொண்டு வரப்பட்டுள்ளன. இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொடிசியா மைதானம், பிரதமர் பயணம் செய்யும் சாலைகள், காவல் துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

பொதுக்கூட்ட மேடைக்கு, ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் மேற்கு, தெற்கு, மத்திய மண்டலங்களைச் சேர்ந்த, ஆறாயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து, தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமர் பயணம் செய்யும் பாதை, பங்கேற்றும் இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை, தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., திரிபாதி நேற்று பார்வையிட்டார்.

 

     பிரதமரின் வருகையை முன்னிட்டு, நடுவண் அரசின் சாதனைகளை விளக்கும், இரு சக்கர வாகன கருத்துப் பரப்புதலை, பா.ஜ., அலுவலகத்தில், நடுவண் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று தெடக்கி வைத்தார். நடுவண் அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள், பிரசாரத்தில் வினியோகிக்கப்பட்டன. பா.ஜ., முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநிலப் பொருளாளர் சேகர், மாநகர் மாவட்டத் தலைவர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.