Show all

கார் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு குஜராத் அதிரடி

குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள நெடுங்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது என பாஜக முதல்வர் ஆனந்தி பென் படேல் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. குஜராத்தில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி விடுiலை நாளில் இருந்து நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முதல்வர் ஆனந்தி பென் படேல் அறிவித்துள்ளார். வல்சாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஆனந்தி பென் பேசுகையில், குஜராத்தில் வருகிற 15ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பைக், கார் உள்பட சிறிய ரக வாகனங்கள் எவையும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம். கனரக வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மட்டுமே சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அதற்கான தொகையை மாநில அரசு செலுத்தி விடும். இதனால் சுங்க சாவடிகளுக்கும் இழப்பு ஏற்படாமல் சரி செய்யப்படும். இதுகுறித்த தகவல்களைப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக அண்மையில் மகாராஷ்டிராவில் 12 சுங்கச்சாவடிகளை பட்நவிஸ் அரசு இழுத்து மூடியது. இதற்கான தொகை ரூ.798 கோடியை சுங்க சாவடிகளுக்கு மாநில அரசு செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் பைக், கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக ஒலித்து வருகிறது. கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் மூலம் குறைந்த அளவே சுங்க வருவாய் வருகிறது. மாறாக கனரக வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மூலமாகத்தான் அதிக அளவில் சுங்க கட்டண வருவாய் வருகிறது என அண்மையில நடுவண் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் சுட்டி காட்டியிருந்தார். எனவே குஜராத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.