Show all

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் மற்றும் ஆறுமுகம் மேற்கொண்டுள்ள இம்முயற்சி சரியானது; பாராட்டத்தக்கது ஆகும்.

தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி செலுத்த வேண்டும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதில் ஆறில் ஒரு பங்கை அதாவது சுமார் 7 கோடியை தாங்களே செலுத்துவதாக இவர்கள் முன்வந்துள்ளனர்.

மீதமுள்ள நிதியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நன்கொடையாக திரட்ட அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

அவர்களின் முயற்சிக்கு உதவி செய்ய வேண்டியது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் நடுவண், மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும். ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பல நூறு கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட போதிலும் அதனால் தமிழுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டால் தமிழுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக ‘யோகா’ கலை இந்தியாவில் தான் தோன்றியது. ஆனால், அதன் பல்வேறு சிறப்புகளை அறிவியல் பூர்வமாக வெளிக்கொண்டு வந்தது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தான்.

கவலை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை போக்கவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தவும் யோகா கலை உதவுகிறது என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழகம் தான் நிரூபித்தது. யோகா கலை உலகம் முழுவதும் பரவி இருப்பதற்கு இத்தகைய ஆராய்ச்சிகள் தான் காரணமாகும்.

எனவே, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல், சமஸ்கிருத மொழி குறித்த ஆராய்ச்சிக்கும், பிரச்சாரத்திற்கும் பெருமளவில் நிதி உதவி செய்யும் நடுவண் அரசு அதைவிட மூத்த, இனிய மொழியான தமிழ் மொழியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு வகை செய்யும் இத்திட்டத்திற்கும் நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.